பக்கங்கள்

17 ஜூலை 2010

ராஜபக்ஷவை கண்டித்து பேசுவது எப்படி இந்திய இறையாண்மையை மீறுவதாகும்?சீமானின் வழக்கறிஞர் கேள்வி.



ராஜபக்சவும் அவரை சார்ந்த இனமும் தமிழக மீனவர்களை சுட்டுக்கொண்டே இருக்கும்போது, அவரை கண்டித்துப் பேசுவது எப்படி இந்திய இறையாண்மைக்கு எதிராக அமையும் என்று சீமான் வழக்கறிஞர் சந்திரசேகர் கூறினார்.
இலங்கை தமிழர்கள் படுகொலையை கண்டித்தும், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதை கண்டித்தும் சீமான் ஆர்ப்பாட்டம் நடத்தினார். அப்போது பிரிவினை மற்றும் தீவிரவாதத்தை தூண்டும் வகையில் பேசியதாக சீமான் மீது பொலிஸார் வழக்குப் பதிவு செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சீமானை, தேசிய பாதுகாப்பு சட்டத்தில் காவலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. பிரிவினை மற்றும் தீவிரவாதத்தை தூண்டும் வகையில் பேசியதற்காக சீமான் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சென்னை மாநகர பொலிஸ் தெரிவித்துள்ளது.
இன்று காலை சீமான் அடைக்கப்பட்டுள்ள வேலூர் சிறைக்குச் சென்ற பொலிஸார், அவரிடம் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டது தொடர்பான உத்தரவை வழங்கினர்.
சீமான் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்திருப்பது தமிழ் உணர்வாளர்களிடையே அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அதேசமயம், இதைக் கண்டித்து யாரேனும் போராட்டம் நடத்தினாலோ அல்லது போஸ்டர்கள் உள்ளிட்டவற்றை ஒட்டினாலோ அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க பொலிஸார் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தன்னை பல வருடங்களாகப் பயன்படுத்தாமல் உள்ள பாழடைந்த சிறை அறையில் அடைத்து வைத்துள்ளதாக நாம் தமிழர் அமைப்பின் தலைவர் சீமான் புகார் கூறியுள்ளார்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான் வழக்கறிஞர் சந்திரசேகர், ராஜபக்சவும் அவரை சார்ந்த இனமும் தமிழக மீனவர்களை சுட்டுக்கொண்டே இருக்கும்போது, அவரை கண்டித்துப் பேசுவது எப்படி இந்திய இறையாண்மைக்கு எதிராக அமையும். இதை முன்வைத்துதான் நாங்கள் வழக்காடுவோம்.
சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்வதற்கு, அடிப்படை முகாந்திரம் இல்லை என்றும், மேலும் இதனை நீதிமன்றத்தின் மூலம் சந்திக்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.