பக்கங்கள்

06 ஜூலை 2010

சரணடைய சென்ற புலிகளை கொன்றதை கண்டிக்கிறேன்.


விடுதலைப் புலிகள் அமைப்பை துணிச்சலுடன் நான் எதிர்த்தேன். கருணாநிதி எதிர்க்கவில்லை. விடுதலைப் புலிகள் அமைப்பை எதிர்க்கும் துணிச்சல் கருணாநிதிக்கு என்றைக்குமே இருந்ததில்லை. இன்றைக்குக் கூட, போரில் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டதை நான் கண்டிக்கவில்லை. ஆனால், வெள்ளைக் கொடிகளை அசைத்து, ராணுவத்தின் முன்பு சரணடைந்த விடுதலைப் புலிகளை வேண்டுமென்றே கொன்றதை நான் கண்டிக்கிறேன் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
முதல்வர் கருணாநிதியும் போர்க் குற்றவாளிதான் என குற்றஞ்சாட்டி வெளியிட்ட எனது அறிக்கையை அவர் கண்டித்திருப்பதை நான் வரவேற்கிறேன். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நியாயமான விசாரணையை எதிர்கொள்ள ஏதுவாக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இலங்கை அரசை வலியுறுத்தி தமிழக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறித்து என் மீது குற்றம் சுமத்தியுள்ளார் கருணாநிதி.
தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் எந்த உறுப்பினரும் இந்தியாவிற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்ற மற்றொரு தீர்மானம் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் எனது ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்டது குறித்தும் என் மீது கருணாநிதி குற்றம் சுமத்தியுள்ளார்.போர் நடக்கும் போது பொதுமக்கள் கொல்லப்படுவது தவிர்க்க முடியாது என்று நான் தெரிவித்தது உண்மை தான். நடைமுறையில் உலகம் சந்தித்த ஒவ்வொரு போரிலும் நடைபெற்றது இதுதான். ஆனால் கருணாநிதி, வேண்டுமென்றே போரின் போது பொதுமக்கள் கொல்லப்படுவதையும், போர் முடிந்துவிட்டது என்று கருணாநிதியால் அறிவிக்கப்பட்ட பின்னர் தடை செய்யப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொத்து கொத்தாக கொன்று குவித்ததையும் ஒப்பிட்டுப் பேசுகிறார்.
என்னை விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிரானவள் என்று குற்றம் சுமத்துவதன் மூலம் தமிழர்களுக்கு எதிரானவள் என்ற முத்திரையையும் குத்தலாம் என கருணாநிதி நினைக்கிறார். 1980 களிலிருந்து எம்ஜிஆரும், நானும் இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு அனைத்து உரிமைகளும், சுதந்திரமும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் விடுதலைப் புலிகளின் போராட்டத்துக்கு ஆதரவு அளித்து வந்தோம். ஆனால், தமிழ் மிதவாதிகளையும், போட்டி அமைப்புகளைச் சேர்ந்த உறுப்பினர்களையும், முன்னாள் பிரதமரையும் கொலை செய்ததற்குப் பிறகு, விடுதலை போராட்ட அமைப்பு தீவிரவாத அமைப்பாக மாறிவிட்டது என்பது வெளிப்படையானது.
அந்த தருணத்திலிருந்து விடுதலைப் புலிகள் அமைப்பை துணிச்சலுடன் நான் எதிர்த்தேன். கருணாநிதி எதிர்க்கவில்லை. விடுதலைப் புலிகள் அமைப்பை எதிர்க்கும் துணிச்சல் கருணாநிதிக்கு என்றைக்குமே இருந்ததில்லை. இன்றைக்குக் கூட, போரில் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டதை நான் கண்டிக்கவில்லை. ஆனால், வெள்ளைக் கொடிகளை அசைத்து, ராணுவத்தின் முன்பு சரணடைந்த விடுதலைப் புலிகளை வேண்டுமென்றே கொன்றதை நான் கண்டிக்கிறேன்.
போர் முடிந்துவிட்டது என்ற வார்த்தையை நம்பி பதுங்குக் குழிகளிலிருந்து வெளிவந்த ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி இலங்கைத் தமிழர்கள் கொல்லப்பட்டதை நான் கண்டிக்கிறேன். இவ்வாறு தமிழர்களை கொன்று குவித்ததற்குக் காரணமானவர்களுடன் விருந்தில் கலந்து கொள்வதற்காக தன்னுடைய மகளையும், மூத்த திமுக கட்சியினரையும், கூட்டணியினரையும் அனுப்பி வைத்து அவர்கள் விலை உயர்ந்த பரிசு பொருட்களுடன் இந்தியா திரும்பி வந்ததற்குக் காரணமான முதல்வர் கருணாநிதியின் நடவடிக்கையை நான் கண்டிக்கிறேன் என்று ஜெயலலிதா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.