இலங்கை அமைச்சரின் கோரிக்கைக்கு இணங்க ஒரு போதும் ஐ.நா. நிபுணர்குழு கலைக்கப்படமாட்டாது. அந்தக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவும் மாட்டாது. இவ்வாறு ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளரான பர்ஹான் ஹக் நேற்றிரவு பி.பி.ஸி. க்குத் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் பி.பி.ஸிக்குத் தெரிவித்தவை வருமாறு:-
கொழும்பு ஐ.நா. அலுவலகத்தில் பணியாற்றும் எமது ஊழியர்களின் பாதுகாப்பு குறித்து நாம் ஆழ்ந்த கவலையடைந்துள்ளோம். அத்துடன் இது குறித்து அவதானித்து வருகின்றோம். இதேவேளை இலங்கை அரசுடன் இது தொடர்பாக பேசிவருகின்றோம்.
எனினும் எமது பணியாளர்கள் குறித்து எமக்கு முழுமையான தகவல் எதுவும் கிடைக்கவில்லை. எங்களுக்கு தெரிந்தவகையில் நேற்றைய சம்பவத்தில் எவரும் பாதிக்கப்படவில்லை.
ஆனால் அவர்கள் தற்பொது அலுவலகத்துக்கு உள்ளே இருக்கின்றனரா அல்லது வெளியே உள்ளனரா என்பது குறித்து எம்மிடம் முழுமையான தகவல் இல்லை இப்படி அவர் பி.பி.ஸிக்குச் சொன்னார்.
இலங்கை அமைச்சரின் வேண்டுகோளுக்கு இணங்க ஐ.நா நிபுணர் குழு கலைக்கப்படுமா? என்று பி.பி.ஸி செய்தியாளர் அவரிடம் கேட்டபோது இல்லை. அது ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்றார்.
அமைச்சர் விமல் வீரவன்ஸ வெளியிட்ட கருத்துத் தொடர்பாக ஐ.நாவிற்கு இலங்கை அரசின் மன்னிப்புக்கோரும் அறிக்கை ஏதாவது கிடைத்ததா? என்று பி.பி.ஸி செய்தியாளர் மீண்டும் ஒரு கேள்வியைக் கேட்டபோது,
ஆம், நாங்கள் இலங்கை அரசிடம் தெளிவான பதிலை எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம் இதுகுறித்து என்ன நடவடிக்கைள் எடுக்கப்படுகின்றன என்பது தொடர்பாக நேற்று முன்நாள் திங்கட்கிழமை இலங்கைப் பிரதமர் அலுவலகத்திலிருந்து எமக்கு அறிக்கை ஒன்று கிடைத்தது. ஆனால் அதன் பின்னர் நேற்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.