சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரித்து தனக்கு ஆலோசனை வழங்குவதற்கு ஐ.நா. செயலாளர் நாயகத்தினால் அமைக்கப்பட்டுள்ள நிபுணர்குழுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அணிசேரா நாடுகளின் கடிதத்தில் பாகிஸ்தானும் மலேசியாவும் கையொப்பமிடுவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதை அடுத்து அரச அதிபர் மகிந்த அதிர்ச்சியடைந்துள்ளார் என்று சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக தெரியவருவதாவது:-
விடுதலைப்புலிகளுக்கு எதிரான சிறிலங்காவின் போருக்கு பாகிஸ்தான் பிரதான பங்காளிகளில் ஒரு நாடாக அங்கம் வகித்து, அனைத்து ஆயுத வசதிகளையும் வழங்கிவந்திருந்தது. விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் உக்கிரமடைந்திருந்தவேளையில், சிறிலங்காவின் போர் முடிவடையும் வரை இரண்டு மாதங்களுக்கு ஒரு கப்பல் ஆயுதங்கள் என்ற ரீதியில் ஆயுதங்களை வழங்கவும் பாகிஸ்தான் தயார் என்று அந்நாட்டு அரச தரப்பு அறிவித்த அளவுக்கு, சிறிலங்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான படைத்துறை சகவாசம் உச்சத்தை அடைத்திருந்தது.
அதேபோன்று, மலேசியாவை பொறுத்தவரை விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்களில் ஒருவரான கே.பி. கைது செய்யப்படுவதற்கு சிறிலங்காவுக்கு பெருமளவில் அந்நாடு உதவியளித்திருந்தது. விடுதலைப்புலிகள் அமைப்பு சிறிலங்காவில் அழிக்கப்பட்ட பின்னர், புலம்பெயர்ந்த தமிழர்களினால் முன்னெடுக்கப்படவிருந்த கே.பி. தலைமையிலான ஜனநாயக வழிப்போராட்டத்துக்கு கே.பி. கைது படலத்தின் ஊடாக பின்னடைவை ஏற்படுத்துவதற்கு மலேசியா பாரிய பங்களிப்பை வழங்கியிருந்தது.
இந்நிலையில், இவ்விரு நாடுகளும் தற்போது சிறிலங்காவுக்கு ஆதரவாக செயற்படுவதற்கு திடீரென மறுப்பு தெரிவித்துள்ளன. அதாவது, சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரித்து தனக்கு ஆலோசனை வழங்குவதற்கு ஐ.நா. செயலாளர் நாயகத்தினால் அமைக்கப்பட்டுள்ள நிபுணர்குழுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அணிசேரா நாடுகளின் கடிதத்தில் பாகிஸ்தானும் மலேசியாவும் கையொப்பமிடுவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளன.
ஏனெனில், அண்மையில் காஸா பகுதிக்கு உதவிப்பொருட்களை கொண்டுசென்ற கப்பலின் மீது இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதல் தொடர்பாக விசாரிப்பதற்கு ஐ.நா. அமைத்துள்ள விசாரணைக்குழுவுக்கு உலகெங்கும் உள்ள முஸ்லிம் நாடுகள் தமது ஆதரவை வலியுறுத்திவருகின்றன. அதாவது, இஸ்ரேலின் தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ள ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனின் முயற்சிக்கு அனைத்து முஸ்லிம் நாடுகளும் ஆதரவை வழங்கிவருகின்றன.
இந்நிலையில், ஐ.நா. சபையை மட்டுமல்லாமல் செயலாளர் நாயகம் பான் கீ மூனை தனிப்பட்ட ரீதியில் சர்வதேச ரீதியில் கடுமையாக தாக்கி வரும் சிறிலங்காவுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்து, அந்த நடவடிக்கை இஸ்ரேலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற முஸ்லிம் நாடுகளின் தார்மீக கோரிக்கைக்கு பங்கம் விளைவிப்பதாக அமைந்துவிடுமோ என்ற அச்சத்தில் முஸ்லிம் நாடுகளான மலேசியாவும் பாகிஸ்தானும் சிறிலங்காவுக்கு ஆதரவளிப்பதற்கு மறுப்பு தெரிவித்திருக்கின்றன.
- இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.