பக்கங்கள்

09 ஜூலை 2010

சீக்கியனின் மயிருக்கு இருக்கும் மதிப்பு தமிழனின் உயிருக்கு இல்லையா?சீமான் ஆவேசம்.




பிரான்சில் சீக்கியனின் மயிர்ப் பிரச்சனைக்காக விமானம் ஏறிச்சென்று வாதாடிய இந்தியப்பிரதமர் மன்மோகன் சிங் தினசரி கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் மீனவனின் உயிர் குறித்து என்றாவது அக்கறை காட்டியிருக்கின்றாரா?சீக்கியனின் மயிருக்கு இருக்கும் மதிப்பு கூட தமிழ் மீனவனின் உயிருக்கு இல்லையா? என்று சீமான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் இயக்கத்தலைவர் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது.
நாகப்பட்டினம் மாவட்டம், கோடியக்கரைக்கு தென் கிழக்கே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த வேதாரண்யம் பகுதி மீனவர்கள் மீது சிங்களக் கடற்படையினர் புதன்கிழமை இரவு தாக்குதல் நடத்தியதில் நமது தமிழ் மீனவர் செல்லப்பன் கொல்லப்பட்டுள்ளார்.இது போக மற்ற மீனவர்கள் மீது சிங்கள கடற்படையினர் கடும் தாக்குதல் நடத்தியதுடன் அவர்களை மிகவும் இழிவாக நடத்தியுள்ளனர்.
கடந்த 60 ஆண்டுகளாக நம் மீனவர்கள் மீது தொடர்ந்து சிங்கள கடற்படையினர் தாக்குதல் நடத்திக் கொலை செய்வதும், அவர்களின் படகுகள் மோசமான முறையில் சேதப்படுத்தப்பட்டு, வலைகள் அறுக்கப்பட்டு, மீன்கள் கொள்ளையடிக்கப்படுவதும் அதனை நம் அரசியல் தலைவர்கள் கண்டித்து வெற்று அறிக்கை வெளியிடுவதும் தொடர்கதையாக உள்ளது. தமிழ் மீனவர்கள் இந்திய கடல் பகுதிக்குள் கூட மீன் பிடிக்க முடியாத அளவுக்கு இலங்கை கடற்படையின் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது இந்த முறையாவது நாம் இதனைத் தடுத்து நிறுத்த வேண்டும்.இந்த நிலைக்கு காரணம் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி,அதிகாரத்தில் இருப்பவர்களின் கையாலகாத்தனம் தான்.
இலங்கைக் கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்ட இந்தியர்களான தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கு இதுவரை- ஒரு உயிருக்குக் கூட – இந்திய அரசின் சார்பில் நிதியுதவியோ அல்லது வேறு வகையான உதவிகளோ செய்யப்படவில்லை – குறைந்தபட்சம் ஆறுதல் கூட தெரிவிக்கப்பட்டதில்லை. இது குறித்து இதுவரை இந்திய தூதரகம் பெயரளவுக்கு கூட இலங்கையிடம் ஒரு கண்டனம் தெரிவிக்கவில்லை.
சில மாதங்களுக்கு முன் டெல்லியில் உள்ள இலங்கை தூதரகத்தின் முன் இன உணர்வாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தால் அங்குள்ள பூத்தொட்டி உடைந்தவுடன் பதைபதைத்து தன் கவலையை இலங்கைக்கு தெரிவித்த மத்திய அரசு,உடனடியாக விசாரணையை முடுக்கிய மத்திய அரசு இது வரை செத்த 500 க்கும் மேற்பட்ட தமிழ் மீனவனுக்கு என்ன செய்திருக்கின்றது?
பிரான்சில் சீக்கியனின் மயிர்ப் பிரச்சனைக்காக விமானம் ஏறிச்சென்று வாதாடிய இந்தியப்பிரதமர் மன்மோகன் சிங் தினசரி கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் மீனவனின் உயிர் குறித்து என்றாவது அக்கறை காட்டியிருக்கின்றாரா?சீக்கியனின் மயிருக்கு இருக்கும் மதிப்பு கூட தமிழ் மீனவனின் உயிருக்கு இல்லையா?
இது தான் இந்திய ஒருமைப்பாட்டின் லட்சணமா?
இந்தியாவின் கிழக்கு கடற்படை காமாண்டோ ராஜசேகர் நேற்று அளித்த பேட்டியில் இலங்கை கடற்படையினர் இந்தியாவில் எங்களை மீறி நுழைய வாய்ப்பில்லை என்று சொல்லியிருக்கின்றார்.அப்படியானால் அவர்களுக்குத் தெரிந்து தான் இத்தகைய சம்பவங்கள் நடக்கின்றதா?
.வழக்கம் போல் நமது முதல்வரும் கடிதம் எழுதி பிரச்சனையை முடித்து விட்டார். தமிழர்களின் பிரச்சனைக்கு மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதையே தீர்வாக சொல்லும் முதல்வரே, மத்திய அரசு இப்பிரச்சனையத் தீர்க்க ஒன்றும் செய்ய வில்லை என்று மத்தியில் பதவி வகித்துக்கொண்டே நேற்று கூறியிருக்கின்றார். இந்த முறையும் கடிதம் எழுதி விட்டு வழக்கம் போல் பிரச்சனையை முடித்து விட்டார்.பதவிகளைப்பெறுவதற்கு விமானம் ஏறும் முதல்வர் மீனவர் பிரச்சனைக்கு கடிதம் மட்டும் எழுதி கடமை முடித்து விட்டார்.
இது தொடர்கதையாகி விடக்கூடாது.
ஆகவே இந்த முறையாவது தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரண்டு நம் மீனவனின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.முதற் கட்டமாக இதுவரை உயிரிழந்த மீனவர்கள் அனைவருக்கும் 10 லட்ச ரூபாய் நஷ்ட ஈடும்,இறந்தவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் அளிக்க வேண்டும்.இல்லையெனில் இந்திய இறையான்மை என்பது வரைபடத்தில் மட்டுமே இருக்கும் ஒன்றாக மாறிவிடும்.
இவ்வாறு அறிக்கையில் சீமான் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.