பக்கங்கள்

30 ஜூலை 2010

ஏழாவது நாளாக தொடரும் சிவந்தனின் நீதிக்கான நடைப்பயணம்.


தமிழ் மக்களிற்காக நீதிகேட்டு இன்று 7வது நாளாக சிவந்தன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி தனது மனிதநேய நடை பயணத்தை மேற்கொண்டுள்ளார். கடும் வெயில், காற்றின் மத்தியில் ஏற்றம் இறக்கமான பிரதேசங்கள் ஊடாக இன்று அவரது பயணம் நடைபெறுவதால், மிகவும் களைத்த நிலையிலேயே சிவந்தன் தனது உறுதிமிக்க மனிதநேயப் பயணத்தை தொடருகின்றார். இன்று காலையில் இருந்து நண்பகல்வரை சுமார் 11 கிலோமீற்றர்கள் அவர் நடந்திருக்கின்றார். அமீனஸ் (Amiens) நகரத்தை நோக்கி நடந்துகொண்டிருக்கும் அவர் பரிஸ் நகரை அடைவதற்கு இன்னும் 160 கிலோமீற்றர்கள் நடக்க வேண்டியுள்ளது. பரிசில் இருந்து ஜெனீவா நோக்கி 600 கிலோமீற்றர்கள்வரை நடந்து செல்ல வேண்டியுள்ளதால், மொத்தம் 1000 கிலோமீற்றருக்கு மேற்பட்ட தூரத்திற்கு சிவந்தன் நடந்து செல்லுகின்றார். இன்று காலையில் லண்டனில் இருந்து சென்ற சிலர் சிவந்தனது மனிதநேய நடை பயணத்தில் தம்மையும் இணைத்திருந்தனர். சிவந்தனுக்கு துணையாக லண்டனில் இருந்து அவருடன் சென்றிருந்த இலக்கியனும் அவ்வப்பொழுது இணைந்து நடந்து செல்வதுடன், பிரான்சின் கடற்கரையான கலைசில் இருந்து பொஸ்கோ என்ற இளைஞனும் வேறு சிலரும் இணைந்து நடந்து செல்லுகின்றார். சிறீலங்கா அரசின் போர்க்குற்றங்கள் மீது சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும், கொல்லப்பட்ட அப்பாவி மக்களிற்கு நீதி கிடைக்க வேண்டும், தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும், மனித உரிமைகள் மதிக்கப்படும்வரை சிறீலங்காவைப் புறக்கணிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நீதிகேட்டு சிவந்தன் இந்த நடை பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.