பக்கங்கள்

01 ஜூலை 2010

நாங்கள் விரும்பியே நித்தியானந்தரின் ஆச்சிரமத்திற்கு செல்கிறோம்,பெண் சகோதரிகள் பரபரப்பு புகார்.



நித்யானந்தா சாமியாரின் பெண் சீடர்கள் 2 பேர் நேற்று போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து பரபரப்பான புகார் மனு ஒன்றை கொடுத்தனர். கன்னியாகுமரி மாவட்டம், தோவாளையை சேர்ந்தவர் கிருஷ்னேஸ்வரி என்ற நித்ய பிரீத்தானந்தா (வயது 29) எம்.ஏ. பட்டதாரி. இவரது தங்கை சித்ரேஸ்வரி என்ற நித்ய பிராவனானந்தா (28). இவரும் எம்.ஏ. பட்டதாரி ஆவார். அக்கா-தங்கையான இவர்கள் இருவரும் நித்யானந்தா சாமியாரின் சீடர்கள் ஆவார்கள். இவர்கள் நேற்று காலையில் சென்னை நகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்தனர். அவரிடம் பரபரப்பான புகார் மனு ஒன்றையும் கொடுத்தனர். அந்த புகார் மனுவில் அவர்கள் இருவரும் கையெழுத்து போட்டிருந்தனர். மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:- உடன்பிறந்த சகோதரிகளான நாங்கள் இருவரும் எம்.ஏ. பொருளாதாரம் படித்துவிட்டு தற்போது பி.எச்டி. படித்து வருகிறோம். சென்னையில், எங்கள் அப்பாவின் தம்பியான விஸ்ரூபானந்தாவின் வீட்டில் தங்கியுள்ளோம். நாங்கள் பெங்களூரில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்தில் பி.எஸ்பி. ஹீலர் நித்யானந்தம் போன்ற வகுப்புகளில் சேர்ந்து படித்து தேர்வு பெற்றோம். அவரது ஆசிரமத்திலேயே நாங்கள் இருவரும் பிரமச்சாரிகளாக பணிபுரிந்து வந்தோம். எங்களது பெற்றோரின் அனுமதியோடுதான் நாங்கள் நித்யானந்தாவின் ஆசிரமத்தில் தங்கியிருந்தோம். நித்யானந்தா மீது எங்கள் தந்தைக்கு மரியாதை இருந்ததால் எங்கள் தந்தை ஆசிரமத்திற்கு வந்து அடிக்கடி எங்களை பார்த்துவிட்டு செல்வார். நித்யானந்தா மீது கடந்த மார்ச் மாதம் உண்மைக்கு புறம்பாக சில குற்றச்சாட்டுகள் வந்தபோது எங்களது தந்தை எங்களை சென்னைக்கு அழைத்து வந்துவிட்டார். எங்கள் வீட்டில் வைத்து எங்களை கட்டாயப்படுத்தி எங்கள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்க முயற்சித்தார்கள். நாங்கள் திருமணத்துக்கு உடன்படவில்லை. எங்களது பெற்றோரின் தொல்லை தாங்கமுடியாமல், நாங்கள் எங்கள் சித்தப்பா வீட்டுக்கு வந்துவிட்டோம். நாங்கள் மீண்டும் நித்யானந்தாவின் ஆசிரமத்துக்கு செல்வதற்கு முடிவு செய்து அதற்கு ஆயத்தமானோம். அதற்கு எங்கள் பெற்றோர் சம்மதிக்கவில்லை. நித்யானந்தாவின் ஆசிரமத்துக்கு மீண்டும் சென்றால் அவர் உங்களை கடத்தி சென்றுவிட்டார் என்று போலீசில் புகார் கொடுப்போம் என்று எங்கள் பெற்றோர் மிரட்டி வருகிறார்கள். நாங்கள் சுய நினைவோடு யாருடைய தூண்டுதலுமின்றி ஆன்மிக பணி ஆற்றுவதற்காக மீண்டும் நித்யானந்தாவின் ஆசிரமத்துக்கு செல்கிறோம். ஒருவேளை இதையொட்டி நித்யானந்தா மீது எங்கள் பெற்றோர்கள் பொய்யான புகார் எதுவும் கொடுத்தால் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த புகார் மனு கொடுத்த பெண் சீடர்கள் கிருஷ்னேஸ்வரி, சித்ரேஸ்வரி ஆகிய இருவரும் தங்க நகைகள் எதுவும் அணிந்திருக்கவில்லை. ருத்ராட்சை மாலையையே கழுத்தில் அணிந்திருந்தார்கள். அவர்களை பத்திரிகை நிருபர்கள் சூழ்ந்து கொண்டு சரமாரியாக கேள்வி கேட்டனர். அதற்கு பதில் அளித்து அவர்கள் இருவரும் கூறியதாவது:- கேள்வி:- நித்யானந்தாவின் சீடர்களாக நீங்கள் மாறியது ஏன்? உங்கள் பெற்றோர் அறிவுரைபடி நீங்கள் திருமண வாழ்க்கையை தொடங்கலாமே? பதில்:- நித்யானந்தா மீது எங்கள் பெற்றோரும் முதலில் நல்ல மரியாதை வைத்திருந்தார்கள். எங்களது தந்தை ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆவார். அவர் மன அழுத்த நோயால் மிகவும் அவதிப்பட்டார். அடிக்கடி தற்கொலை செய்துகொள்ளப்போகிறேன் என்று சொல்லுவார். நித்யானந்தாவை சந்தித்த பிறகு மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டார். அதன்பிறகுதான் எங்கள் குடும்பத்தினருக்கு நித்யானந்தா மீது மரியாதை ஏற்பட்டது. எங்கள் பெற்றோரின் அனுமதியோடும், அவர்கள் கொடுத்த உத்தரவாத கடிதத்தோடும்தான் நாங்கள் நித்யானந்தாவின் ஆசிரமத்தில் சேர்ந்தோம். அவரது ஆசிரமத்தில் எங்களை போல் 300 இளம் பெண்கள் அவரது சீடர்களாக பணிபுரிகிறார்கள். நாங்கள் சம்பளத்துக்காக அங்கு வேலைபார்க்கவில்லை. ஆன்மிக பணியில் எங்களை அர்ப்பணித்துக்கொண்டு ஆசிரமத்தில் தங்கியிருந்தோம். திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டுக்கொண்டும் ஆன்மிக பணியை செய்யலாம். திருமணம் செய்யாமல் பிரமச்சாரிகளாக இருந்தும் ஆன்மிகத்தில் ஈடுபடலாம். நாங்கள் 2-வது வழியை தேர்ந்தெடுத்துள்ளோம். நித்யானந்தாவின் ஆசிரமத்தில் எங்களைபோன்ற இளம் பெண்கள் மட்டுமல்லாமல், எத்தனை கணவன்-மனைவிகள் கூட தங்கியிருக்கிறார்கள். ஆன்மிகத்தில் ஈடுபட்டுவிட்டால் அழகு, ஆசை, வயது எதிலும் ஈடுபாடோடு இருக்கக்கூடாது. அதனால்தான் நாங்கள் தங்க நகைகள் அணிந்துகொள்ளவில்லை. எங்களுடைய வாழ்க்கையை முடிவு செய்துகொள்ள எங்களுக்கு உரிமை இருக்கிறது. எங்கள் பெற்றோர் சம்மதத்தின்பேரில்தான் இந்த வாழ்க்கையை நாங்கள் தேர்வு செய்தோம். இப்போது திடீரென்று பிரம்மச்சாரியத்தை கைவிட்டு, விட்டு திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கைக்கு வரும்படி எங்கள் பெற்றோர் சொல்லுகிறார்கள். நித்யானந்தா மீது போலீசார் போட்டுள்ள வழக்கை அடிப்படையாக வைத்து எங்கள் பெற்றோர் இந்த முடிவுக்கு வந்துள்ளனர். நாங்கள் நித்யானந்தாவை நம்புகிறோம். அவர் விரைவில் நிரபராதி என்று போலீஸ் வழக்கில் இருந்து விடுதலை பெற்று வருவார். நடிகை ரஞ்சிதாவோடு இணைத்து வெளியிடப்பட்ட சி.டி. படத்தை நாங்கள் நம்பவில்லை. போலீஸ் வழக்கு விசாரணை இருப்பதால் நாங்கள் இப்போது இதற்குமேல் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. நித்யானந்தா மோசமானவராக இருந்திருந்தால் நாங்கள் மீண்டும் அவரது ஆசிரமத்துக்கு போக விரும்புவோமா? இதுவரையில் அவருக்கு எதிராக எந்த பெண்களும் புகார் கொடுக்கவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினார்கள். பெண் சீடர்கள் இருவருக்கும் போலீசார் அறிவுரை வழங்கினார்கள். உரிய ஆதாரங்களோடுதான் நித்யானந்தா மீது பெங்களூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வீடியோ பட ஆதாரமும் உண்மையானது. எனவே நீங்கள் இருவரும் பெற்று, வளர்த்து ஆளாக்கிய பெற்றோர்களின் பேச்சை கேட்டு திருமண பந்தத்தில் ஈடுபட வேண்டும் என்று போலீசார் கேட்டுக்கொண்டனர். ஆனால் பெண் சீடர்கள் இருவரும் நாங்கள் எடுத்த முடிவில் இருந்து மாறமாட்டோம் என்று பதில் அளித்துவிட்டு சென்றனர். ஒருவேளை இதுதொடர்பாக பெண் சீடர்களின் பெற்றோர்கள் புகார் கொடுத்தால் என்ன நடவடிக்கை எடுப்பீர்கள் என்று போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, `சட்டப்படி தேவையான நடவடிக்கை எடுப்போம்' என்று அந்த அதிகாரி கூறினார். பெண் சீடர்கள் இவ்வாறு புகார் கொடுக்க வந்தது போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.