பக்கங்கள்

02 ஜூலை 2010

கருணாநிதி போர்க் குற்றவாளி என்பதற்கான ஆதாரத்தை அதிமுக நிபுணர் குழுவுக்கு சமர்ப்பிக்கும்.-ஜெயலலிதா.



ராஜபக்சே சகோதரர்கள், இலங்கை ராணுவ வீரர்கள் போல கருணாநிதியும் போர் குற்றவாளிதான் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். இது குறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: இலங்கையில் நடந்து முடிந்த உள்நாட்டு போரில் நடைபெற்ற உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் குறித்து விசாரிக்க ஐ.நா. சபை, குழு ஒன்றை அமைத்துள்ளது. இது வரவேற்கத்தக்கது. இலங்கைத் தமிழர்களை தமிழ்நாடு அரசும், முதல்வர் கருணாநிதியும் கைவிட்டு விட்டனர். இந்நிலையில் ஐ.நா. சபை ஆதரவு கரம் நீட்டியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஐ.நா. சபை தலைவரின் இந்த நடவடிக்கை இலங்கைத் தமிழர்கள் பிரச்னையில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. ஐ.நா. சபையின் பிரதிநிதிகள் குழுவுக்கு விசா வழங்க இலங்கை அரசு மறுத்து வருகிறது. இது இலங்கை அரசின் குற்ற உணர்வை வெளிப்படுத்துகிறது. ராஜபக்சே அரசு குற்றம் செய்யவில்லை என்றால், ஐ.நா. குழுவை இலங்கையில் எங்கு வேண்டுமானாலும் சுதந்திரமாக செல்ல அனுமதிக்க வேண்டும். அவ்வாறு அனுமதிக்கப்பட்டால், ராஜபக்சே அரசு செய்த கொடுமைகள் அனைத்தும் வெளிக்கொணரப்படும் என்பதில் சந்தேகமில்லை. இலங்கையில் போர் முடிந்த 19.5.2009-ம் தேதிக்கு மூன்று வாரங்களுக்கு முன்பு, போர் நிறுத்தம் வேண்டும் என்று கூறி முதல்வர் கருணாநிதி சென்னை அண்ணா நினைவிடத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டார். மூன்று மணி நேரத்துக்குப் பிறகு, இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக தனக்கு தகவல் வந்துள்ளது என்று கூறி உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது என்று கருணாநிதி கூறியதை தமிழக மக்கள் மட்டுமின்றி, இலங்கையில் உள்ள தமிழர்களும் நம்பினார்கள். போர் முடிந்து விட்டது என்று நம்பி, பதுங்கு குழிகளிலிருந்து வெளியே வந்தவர்கள் மீது, வானத்தில் வட்டமிட்டுக் கொண்டிருந்த விமானங்கள் கொத்து கொத்தாக குண்டு மழை பொழிந்தன. இந்த தாக்குதலில் இரண்டே நாளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர். போர் நடவடிக்கைகளில் நேரடியாக பங்கேற்காத அப்பாவி மக்களுக்கு எதிராக திட்டமிட்டு தாக்குதலை திருப்பிவிடும் செயல் போர்க் குற்றம் என்று சர்வதேச சட்டம் கூறுகிறது. இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படாதபோது, போர் நிறுத்தம் ஏற்பட்டதாக கருணாநிதி கூறியுள்ளார். இதனால், நிராயுதபாணிகளாக இருந்த அப்பாவி இலங்கைத் தமிழர்களைக் கொல்ல, இலங்கை அரசுக்கு கருணாநிதி உதவி செய்திருக்கிறார். எனவே, ராஜபக்சே சகோதரர்கள், இலங்கை ராணுவ வீரர்கள் போல கருணாநிதியும் போர் குற்றவாளிதான். ஐ.நா. சபை பிரதிநிதிகள் குழு இலங்கை செல்லும்போது, அ.தி.மு.க. குழு அவர்களைச் சந்திக்கும். கருணாநிதி போர் குற்றவாளி என அறிவிக்கத் தேவையான ஆதாரங்களை ஐ.நா. குழுவிடம் அ.தி.மு.க. அளிக்கும். சதிச் செயல்களால் போரில் உயிரிழந்த ஆயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்களுக்காக இதையாவது நாம் செய்ய வேண்டும். இதைத்தான் நம்மால் செய்ய முடியும் என்று ஜெயலலிதா அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.