பொய்கார நடிகர் என்ற அம்சத்தின் கீழ் முதல் பரிசு வழங்கப்படுமானால் அது அமைச்சர் விமல் வீரவன்சவுக்கே வழங்கப்படவேண்டும் என இலங்கையின் ஆங்கில செய்திதாளான சண்டேலீடர் தெரிவித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் புகழ்பெற்றவராக விளங்கும் விமல் வீரவன்ச ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆசிர்வாதத்துடனேயே உண்ணாவிரத நாடகத்தை நடத்தினார் என அனைவருக்கும் தெரிந்த விடயம்.
ஜே.வி.பியி.;ல் இருந்து துரத்தப்பட்ட விமல் வீரவன்ச, குறுகிய காலத்துக்குள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் பிரசித்தம் பெற்றுவிட்டார்.
இந்தநிலையில் அவர், அரசியலில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியவர் என்ற செல்வாக்கை பெற்றுள்ளார்.
எனினும் உயர் பதவிகளில் தமது ஆட்களை கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தமது செல்வாக்குக்கு உரிய விமல் வீரவன்சவின் நடவடிக்கைகளை கண்டும் காணாதவர் போல இருப்பதாக சண்டே லீடர் குறிப்பிட்டுள்ளது.
இதனை பயன்படுத்திக் கொண்டு விமல் வீரவன்ச, செயற்பாடுகளை தனக்குரிய தனித்துவத்துடன் மேற்கொண்டு வருவதாக அந்த செய்திதாள் தெரிவித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமையன்று, விமல் வீரவன்ச அமைச்சர் பதவியில் இருந்து விலகப்போவதாக ஜனாதிபதிக்கு அனுப்பிய ராஜினாமா கடிதம் ஜனாதிபதியின் பலவந்தத்தினால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடாகும்.
அந்த கடிதம் அனுப்பப்பட்டமை அது ஜனாதிபதியினால் ஏற்றுக் கொள்ளப்படாமை போன்ற செயல்களை கண்டு அரசியல் ஆய்வாளர்கள் சிரிக்கின்றனர்.
பெரிதாக கல்வி கற்காத விமல் வீரவன்ச, சிறுகுட்டைக்குள் இருந்துக்கொண்டு பெரிய மீனாக நடிக்கிறார். ஐக்கிய நாடுகள் சபை இவரின் உண்ணாவிரதத்தை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.
விமல் வீரவன்ச உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என பான் கீ மூன் கோரவில்லை அதற்கு பதிலாக கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் தமது பணியாளர்கள் சுதந்திரமாக பணியாற்ற வழிவகுக்கப்பட வேண்டும் என்றே கோரி வந்ததாக சண்டே லீடர் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தநிலையில் உண்ணாவிரதத்தை மறைமுகமாக ஆரம்பித்து வைத்த ஜனாதிபதியே அந்த உண்ணாவிரதத்தை முடித்து வைத்த நிகழ்வு இடம்பெற்றுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.