வடமேல் மாகாணசபை அமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை குருணாகல் அவை மண்டபத்தில் நடைபெற்ற வேளை திடீரென அபாய மணி ஒலித்ததால் சபையில் இருந்த மகாண சபை உறுப்பினர்கள் சிலர் மேசைக்கு கீழ் குனிந்தும், சிலர் மாற்று வழிகளால் ஓடித்தப்ப முனைந்தமையும் இடம் பெற்றதால் சிறிது நேரம் அமளிதுமளி ஏற்பட்டது.
சபை அமர்வு நடைபெற்றுக்கொண்டு இருந்த வேளை திடீரென அபாயமணி ஒலித்தது. அந்தவேளை சபைத்தலைவர் தடுமாற்றம் அடைந்தார். இதைக் கண்ட ஏனைய உறுப்பினர்கள் ஓடித்தப்ப முயன்றனர்.சிலர் மேசைக்குக் கீழ் ஒளித்துக் கொண்டனர்.
பலருடைய முகத்தில் வியர்வை வழிந்தோடியது.சிலர் அவசரக் கதவால் வெளியேற முயன்றபோது அந்தக் கதவுகள் பூட்டப்பட்டு காணப்பட்டதால் கூச்சலும் ஏற்பட்டது.
சபையின் கூச்சல் குழப்பத்தை கண்ட அவைத்தலைவர் இது தொடர்பாக ஆராயும்படி பாதுகாப்பு அலுவலர்களைப் பணித்தார்.அவர்களும் ஓடிச் சென்று விசாரித்துத் தவறுதலாக யாரோ ஒருவர் அபாயமணியை அழுத்தி விட்டதாகத் தெரிவித்தனர்.
இதன்பின் அமைதியடைந்த சபை மீண்டும் கூடிய வேளை பல உறுப்பினர்கள் தங்கள் மேசை மீதிருந்த தண்ணீர் போத்தலை வாயில் வைத்தபடி இருந்தததைக் காணக்கூடியதாக இருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.