|
|
நவநாகரீக உடை அணிந்து சென்ற தனது சகோதரிகளை கூட்டிக்கொண்டு கடைக்கு பொருட்கள் வாங்கச் சென்ற சகோதரர், தனது முன்னிலையில் சகோதரிகளை கீழ்த்தரமான வார்த்தைகளால் பகிடிவதை செய்த இளைஞனிடம் நியாயம் கேட்டபோது அவர் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை யாழ்.நவீன சந்தைக் கட்டடத் தொகுதிக்குள் பொதுமக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கையில் பரபரப்பாக நடைபெற்ற இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:
சம்பவ தினமன்று தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட நபர் தனது சகோதரிகளை அழைத்துக் கொண்டு பொருட்கள் வாங்குவதற்காக யாழ்.நவீன சந்தைத் தொகுதிக்கு சென்றுள்ளார். குறித்த சகோதரிகள் நவநாகரிகமான ஆடைகளை அணிந்தே சென்றிருந்தனர்.
நவீன சந்தைப் பகுதிக்குள் அழகுசாதன பொருட்கள் விற்பனை செய்யும் ஒரு வியாபார நிலையத்தின் உரிமையாளர் கீழ்த்தரமான வார்த்தைப் பிரயோகங்களால் குறித்த சகோதரிகளை பகிடிவதை செய்துள்ளார்.
இதனால் கோபமடைந்த அவர்களின் சகோதரன் குறித்த நபரிடம் நியாயம் கேட்டு அவரையும் திட்டித் தீர்த்தார். இதன்பின்னர் அங்கிருந்து சகோதரியைச் கூட்டிக் கொண்டு கட்டடத் தொகுதியை விட்டு வெளியே சென்று கொண்டிருக்கையில் இடைமறித்த குறித்த நபர் இவரை மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளார்.
தாக்குதலில் இருந்து தப்பித்து யாழ்.வைத்தியசாலை வீதியில் உள்ள தற்காலிக பொலிஸ் பாதுகாப்பு நிலையத்தில் இவர் தஞ்சமடைந்தார்.
மீண்டும் அங்கு வந்தவர்கள் இவரை பொலிஸார் முன்னிலையில் தலைக்கவசத்தினாலும் வீதியில் போடப்பட்டிருந்த பாதுகாப்புத் தடைக் கம்பியினாலும் தாக்கினர்.
சம்பவ இடத்தில் பொதுமக்கள் ஒன்றுபடவே மூவரையும் பொலிஸார் கைதுசெய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தடுத்து வைத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.