பக்கங்கள்

25 ஆகஸ்ட் 2012

தந்தையின் ஊழியர் சேமலாப நிதிக்காக - தாய், தந்தை சகோதரியைக் கொன்றாராம் இவர்!

ஓய்வுபெற்ற தந்தையின் ஊழியர் சேமலாப நிதியிலிருந்து கிடைக்கும் 03 லட்சம் ரூபா பணத்திற்காகவே தந்தை, தாய், சகோதரி மூவரை கொலை செய்ததாக வெள்ளைவத்தை முக்கொலை சூத்தரதாரி வாக்குமூலமளித்துள்ளார். தந்தைக்குக் கிடைக்கும் 03 லட்சம் ரூபா பணத்தை தான் கோரியதாகவும், அதனைத் தர அவர்கள் மறுத்ததால் அவர்கள் மூவரையும் கொலை செய்ததாகவும் சந்தேக நபர் தெரிவித்துள்ளார். நஞ்சு கலந்த யோகட்டை (இனிப்பு சேர்க்கப்பட்ட தயிர்) மூவருக்கும் வழங்கி மூவரையும் கொலை செய்ததாக சந்தேக நபர் தெரிவித்துள்ளார். வெள்ளவத்தை இராமகிருஷ்ணன வீதியில் வீடொன்றில் இருந்து கடந்த 15ஆம் திகதி மூன்று உடலங்கள் மீட்கப்பட்டிருந்தன. இந்த மூவரும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என காவல்துறையின் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்தது. இதனையடுத்து சந்தேக நபரைத் தேடிவந்த காவல்துறையினர் அவரை நேற்று கைதுசெய்திருந்தனர். கொழும்பிலிருந்து குருணாகல் நோக்கி தனியார் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது கடவத்த பிரதேசத்தில் வைத்து சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து கொலைசெய்யப்பட்டவர்களின் மூன்று அடையாள அட்டைகளையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர். சந்தேக நபரைக் கைதுசெய்த கடவத்த காவல்துறையினர் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் நேற்று (24) சந்தேக நபரை ஒப்படைத்தனர். இந்தச் சந்தர்ப்பத்தில் சந்தேக நபர் தலைமயிரை கட்டாயக வெட்டி, அடையாளம் தெரியாத வகையில் சில மாற்றங்களைச் செய்துகொண்டிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். குடும்பத்திலுள்ள மூவரையும் கொலை செய்வதற்காக பயன்படுத்தி நஞ்சில் ஒருபகுதியை அந்தச் சந்தர்ப்பத்தில் அவர் தன்வசம் வைத்திருந்தார். காவல்துறை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ள தகவல்களுக்கமைய, இந்த சந்தேக நபர், கொழும்பில் சொகுசு வாழ்க்கையை வாழ்ந்துள்ளார். தான் பெறும் ஊதியத்தைவிட இரண்டு மடங்கு செலவு செய்துள்ளார். கடன்வாங்கியே இந்த நபர் இவ்வாறு சொகுசு வாழ்க்கையை வாழ்ந்துள்ளார். ஊரில் வீட்டாருக்கும், உறவினர்களுக்கும் தான் சொகுசு வாழ்க்கையை வாழ்ந்துவருவதாகக் காண்பித்துள்ளார். அதிக வாடகைக்கு அமர்த்தப்பட்ட சொகுசு வாகனத்திலேயே இவர் பெற்றோபைர் பார்ப்பதற்குச் சென்றுள்ளார். பாரியளவில் கடன்பெற்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்துவந்த இவருக்கு, கடன்கொடுத்தவர்கள் பணத்தைத் திரும்பிக் கேட்கும்போது அதனைக் கொடுக்க முடியாது நெருக்கடிக்குள் உள்ளாகியுள்ளார். இந்த நிலையில், தந்தைக்கு 3 லட்சம் ரூபா ஓய்வூதியப் பணம் வருவதை அறிந்துகொண்ட சந்தேக நபரை அதனைப் பெறுவதற்கு முயற்சித்துள்ளார். இதற்காக கொட்டகல வீட்டிற்குச் சென்ற சந்தேக நபர், சிலாபம், முன்னேஸ்வரம் கோயிலுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி தந்தை, தாய், தங்கை ஆகியோரை கொழும்பிற்கு அழைத்துவந்துள்ளார். கொழும்பிற்கு அழைத்துவந்த இவர்களை வெள்ளவத்தை இராமகிருஷ்ண வீதியில் வாடகை வீட்டில் தங்கவைத்துள்ளார். நித்திரை மாத்திரைகளை அளவுக்கதிகமாக கலந்த யோகட்டை மூவருக்கும் கொடுத்துள்ளார். இதன்பின்னர் அயலவர்களுக்கு உடனடியாக சந்தேகம் வராத வகையில், வாசனைத் திரவியங்களைத் தெளித்துவிட்டு வெளியேறிய சந்தேக நபர் அங்காங்கே பல பிரதேசங்களில் தலைமறைவாகியிருந்து வந்துள்ளார். இந்த நிலையிலேயே, நேற்றைய தினம் அவர் குருணாகல் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் பேருந்தில் சந்தேகத்திற்கிடமாக நடந்துகொண்டதால், பயணியொருவர் காவல்துறையினருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.