பக்கங்கள்

12 ஆகஸ்ட் 2012

புலம்பெயராளர்கள் 22பேர் கோத்தபாயவுடன் சந்திப்பாம்!

புலம்பெயர் தமிழர்கள் 22 பேர் சில தினங்களுக்கு முன்னர் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷவுடன் இரகசியமாகச் சந்தித்துப் பேசியுள்ளனர். புலிகளின் முன்னாள் ஆயுதத் தரகரான கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன் இந்தச் சந்திப்புக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். அவரது தலைமையிலேயே குழுவினர் கோத்தபாயவைச் சந்தித்துப் பேசினர். இலங்கையில் முதலீடுகளைச் செய்வது குறித்தே இந்தச் சந்திப்பின் போது பேசப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. வெளிநாடுகளில் இலங்கை அரசு குறித்து தவறான பரப்புரைகளில் ஈடுபடவேண்டாம் என்று இந்தச் சந்திப்பில் கோத்தபாய அப்போது கேட்டுக் கொண்டார் என்று நம்பகமாகத் தெரியவந்தது. முன்னாள் புலிகளின் புனர்வாழ்வு நடவடிக்கை, அரசியல் கைதிகளின் விவடுதலை தொடர்பான விடயங்கள் என்பவற்றைக் கோத்தபாயவிடம் இருந்து அவர்கள் கேட்டறிந்து கொண்டனர். அதேவேளை இலங்கையில் முதலிடுவதாக இருந்தால் தமக்கு அதற்குச் சாதகமான சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியதாகவும் அத்தகைய ஒரு சூழல் ஏற்படுவது இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்றைக் காண்பதில்தான் தங்கி இருக்கிறது என்று அவர்கள் கூறியதாகவும் அவ்வாறான சூழலிலேயே நம்பிக்கையுடன் முதலிட புலம்பெயர் தமிழர்கள் முன்வருவார்கள் என்று அவர்கள் சுட்டிக்காட்டினர் என்றும் சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது. ஆஸ்திரேலியா, கனடா, ஐக்கிய ராச்சியம் (லண்டன்), சுவிஸ், பிரான்ஸ், நோர்வே ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களை உள்ளடக்கிய 22 பேரே இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர். அதன் பின்னர் அவர்கள் வடக்கு கிழக்குப் பகுதிகளுக்கும் பயணப்பட்டு நிலைமைகளை நேரில் அவதானித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.