|
|
வவுனியா மாவட்டத்திலுள்ள பாடசாலை மாணவர்களுக்கிடையில் அண்மைக்காலமாக மதுபானம் மற்றும் போதைப்பொருள் என்பனவற்றின் பாவனை அதிகரித்துள்ளதாக சமூக ஆர்வலர்களும், கல்வியியலாளர்களும் கவலை வெளியிட்டுள்ளனர்.
பாடசாலையின் கற்றல் செயற்பாடுகளுக்கு வரும் மாணவர்கள் மதுபானம், போதைப்பொருள்கள் என்பவற்றைச் சூட்சுமமான முறையில் பாடசாலைக்கு எடுத்து வந்து பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மாணவர்கள் சிலர் பாடசாலைக்கு வரும்போது தண்ணீர்ப் போத்தலில் (சுடுதண்ணீர்ப் போத்தல் போன்ற அமைப்பு) மதுபானத்தையும் சோடாவையும் கலந்து கொண்டு வருவதாகவும் அவ்வாறு கொண்டு வரப்பட்ட மதுபானத்தை மாணவர்கள் ஒன்று சேர்ந்து அருந்திய பின்னர் ரகளையில் ஈடுபடுவதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
அண்மையில் வவுனியாவில் உள்ள பாடசாலை ஒன்றில் இவ்வாறு மதுபானம் அருந்திய மாணவர்கள் ஒரு சிலர் காலைப் பிரார்த்தனைக் கூட்டத்தில் ரகளை செய்துள்ளனர்.
மாணவர்கள் மத்தியில் வன்முறைக் கலாசாரம் மேலோங்கிக் காணப்படுவதால் இத்தகைய செயல்பாடுகளில் ஈடுபடும் மாணவர்களைக் காட்டிக் கொடுப்பதற்கு ஆசிரியர்களும், அதிபர்களும் தயக்கம் காட்டுகின்றனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. அவ்வாறு இனங்காட்டிவிட்டால் சம்பந்தப்பட்ட ஆசிரியர் தாக்கப்படுவதற்கான அல்லது அவர்களது உடைமைகள் சேதமாகக்கப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுவதால் பாடசாலைச் சமூகத்தினர் பின்னிற்கின்றனர் என்றும் தெரியவருகின்றது.
தமது பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கையில் அக்கறை கொண்ட பெற்றோர் பிள்ளைகள் பாடசாலை செல்லும் போதும் அவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளிலும் கூடிய கவனம் செலுத்த வேண்டுமெனக் கல்வியியலாளர்களும், சமூக நலன்விரும்பிகளும் வலியுறுத்துகின்றனர்.ஏற்கனவே வவுனியாவில் மாணவர்களால் பல்வேறு அடாவடித்தனமான செயல்கள் அரங்கேறியுள்ளன.
பாடசாலையின் அதிபரொருவரைத் தாக்கியமை, பாடசாலையொன்றின் ஒன்று கூடல் நிகழ்வைக் குழப்புவதற்காகச் சேதங்களை விளைவித்தமை, விளையாட்டு நிகழ்வு ஒன்றின் போது சண்டித்தனத்தைக் காண்பித்தமை என்பன அண்மையில் வவுனியாவில் மாணவர்களால் இடம்பெற்றுள்ள காடைத்தனமான சம்பவங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.