வீட்டிலுள்ளவர்கள் நல்லூர் கந்தசுவாமி கோயில் தேர்த்திருவிழாவுக்குச் சென்றதை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட திருடர்கள் குறித்த வீட்டிலிருந்த சுமார் 25 லட்சம் ரூபா பெறுமதியான 50 பவுண் நகைகளையும், 50 ஆயிரம் ரூபா பணத்தையும் திருடிச்சென்றுள்ளனர்
இந்தச் சம்பவம் நேற்று முற்பகல் யாழ்ப்பாணம் கொட்டடி சிவன் பண்ணை வீதியிலுள்ள வீடொன்றில் இடம் பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
நேற்றைய தினம் நல்லூர்க்கந்தசுவாமி கோயில் தேர்த்திருவிழா என்பதால் ஆலயத்துக்கு காலையிலேயே வீட்டு உரிமையாளரின் மனைவியும் மகனும் சென்றுவிட்டனர். வீட்டு உரிமையாளரான வேலுப்பிள்ளை குலசிங்கம் என்பவர் வீட்டுக்கு முன்புறமாக உள்ள தனது கடையில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார். இதன்போதே திருடர்கள் தமது கைவரிசையை காட்டியுள்ளனர்.
இது குறித்து வீட்டு உரிமையாளர் தெரிவிக்கையில்:
"எனது மனைவியும், மகனும் காலை 8 மணிக்கு கோயிலுக்குச் சென்றுவிட்டு 10 மணிக்குத்தான் திரும்பி வந்தார்கள். அந்த இரண்டு மணித்தியால இடைவெளியில் கடைக்கு வந்த இருவர் என்னிடம் குளிர்சோடா கேட்டனர். எனவே வீட்டிலுள்ள குளிர்சாதனப்பெட்டியிலேயே சோடா இருந்ததால், அதனை எடுத்துவர வீட்டுக்குச் சென்று கதவைத் திறந்தேன். அப்போது தான் வீட்டிலிருந்த நகைகளும் பணமும் களவாடப்பட்ட விடயம் எனக்குத் தெரியவந்தது'' .
"வீட்டின் பின்புறமுள்ள கிணற்றடி வழியாக உள்ளே வந்த திருடர்கள் வீட்டுப் பின் கதவின் தாழ்ப்பாளை உடைத்துள்ளனர். பின்னர் அந்தக் கதவு வழியாக வீட்டின் உள்ளே புகுந்து திருட்டில் ஈடுபட்டுள்ளனர். எம்முடைய கவனயீனமும் திருடர்களுக்குச் சாதகமாகப் போய்விட்டது. நாங்கள் நகைகளை அடைவுபிடித்து வருகின்றோம். அவ்வாறு எம்மிடம் அடைவு வைக்கப்பட்டிருந்த நகைகள் அனைத்தையுமே திருடர்கள் களவாடிச் சென்றுவிட்டனர்'' என்றார்.
சம்பவம் நடைபெற்ற வீட்டின் சுவாமி அறையில் நகைகள், பணம் என்பன வைக்கப்பட்டிருந்தன. ஆனால் அந்த அறையின் கதவு பூட்டப்பட்டிருந்ததனால், கதவு திறந்த நிலையில் காணப்பட்ட பக்கத்து அறையின் சுவரில் ஏறி சுவாமி அறைக்குள் திருடர்கள் குதித்துள்ளனர். பின்னர் அங்கிருந்த அலுமாரியைத் திறந்து அதனுள் வைக்கப்பட்டிருந்த புடைவைகள் மற்றும் பொருள்களைச் சல்லடை போட்டுத் தேடியுள்ளனர். இதன்போதே அவர்கள் நகைகளையும் பணத்தையும் "அபேஸ்" செய்துள்ளனர்.
இது தொடர்பில் யாழ்.பொலிஸிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். எனினும் இது தொடர்பில் எவரும் கைதுசெய்யப்படவில்லை எனத் தெரிவித்த பொலிஸார் திருட்டுப் போயுள்ளதாக் கூறப்படும் நகைகள் எத்தனை பவுண் பெறுமதியானவை என்று உறுதிப்படுத்தப்படவில்லை எனத் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.