பக்கங்கள்

10 ஆகஸ்ட் 2012

புலி உருவத்தைப் பச்சை குத்தியிருந்த பிரான்ஸ் இளைஞன் கைதாகி விடுதலை!

இலங்கைப் படத்தினுள் புலியின் உருவத்தை கையில் பச்சைகுத்தி, நல்லூர்த் திருவிழாவுக்கு வந்த பிரான்ஸ் நாட்டு இளைஞரை யாழ். பொலிஸார் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டார் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: நல்லூர் கந்தசுவாமி கோயில் திருவிழாவுக்காக பிரஸ்தாப 24 வயது மதிக்கத்தக்க இளைஞர் பிரான்ஸிலிருந்து தனது தாயாருடன் வந்திருந்தார். திருநெல்வேலியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்த அவர் திருவிழாவுக்குச் சென்று வந்துள்ளார்.அவர் தனது கைத்தோள்பட்டையில் இலங்கைப் படத்தினுள் புலியின் முழு உருவமும் அடங்கும் வகையில் பச்சை குத்தியுள்ளார். அவரைக்கண்ட பொலிஸார், இராணுவப் புலனாய்வாளர்கள் பின் தொடர்ந்துள்ளனர். பிரஸ்தாப இளைஞர் இந்துப்பாரம்பரியப்படி மேலங்கி அணியாமல் வேட்டி சால்வையுடன் ஆலயத்தினுள் நுழைந்தபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். நேற்றுமுன்தினம் புதன்கிழமை இவர் கைது செய்யப்பட்டு ஒருநாள் பொலிஸ் தடுப்பில் வைத்து கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். பின்னர் யாழ். பொலிஸ் நிலைய தலைமைப் பொறுப்பதிகாரி சமன் சிகேரா, பிரஸ்தாப இளைஞர் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடினார் என்று குற்றஞ்சாட்டி யாழ். நீதிமன்றில் நேற்றுமுற்படுத்தினார். விசாரணையின் போது தான் பிரான்ஸ் நாட்டில் பிறந்து வளர்ந்தமை பற்றி எடுத்துக்கூறிய இளைஞர் பிரான்ஸ் நாட்டு குடியுரிமைக்கான ஆதாரமாக கடவுச்சீட்டை நீதிவானிடம் காண்பித்து தான் நிரபராதி எனத் தெரிவித்துள்ளார். அதனைப் பரீசிலித்த பின்னர் நீதிவான் இளைஞனை விடுதலை செய்தார். அந்த இளைஞன் தமிழ் மொழியை விட ஆங்கிலம் மற்றும் பிரான்ஸ் மொழிகளில் சரளமாகப்பேசினார். என்றும் கூறப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.