பக்கங்கள்

23 ஆகஸ்ட் 2012

பயங்கரவாதத்திற்கு உதவிய மக்களுக்கும் மின்சாரம் கொடுத்துள்ளாராம் சம்பிக்க!

இலங்கை மின்சார சபை நட்டத்திலேயே இயங்குவதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக்க தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்டத்தில் மூன்று மின்சார விநியோகத் திட்டங்களை பொது மக்களிடம் கையளிக்கும் வைபவம் நேற்று நடைபெற்றது அதில் கலந்து கொண்டே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், இரத்தமும் கண்ணீரும் கலந்த வீதி வழியாக மரணத்தை நோக்கிப் பயணிப்பதா அல்லது நீர் வசதி மற்றும் மின்சார வசதி என்பவற்றைப் பெற்று வாழ்வை வளமாக்கிக்கொள்வதா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும். ஒரு வீட்டுக்கு மின்சாரத்தை வழங்குவதற்கு மின்சார சபைக்கு இலட்சக்கணக்கில் பணம் செலவாகின்றது. ஆனால் வீட்டுப் பாவனையாளர்களிடமிருந்து மிகக் குறைந்த பணத்தையே நாம் கட்டணமாக அறிவிடுகிறோம்.இது நாடாளாவிய ரீதியில் உள்ள நடைமுறை இதனால் இலங்கை மின்சார சபை எப்போதும் நட்டத்திலேயே தான் இயங்குகின்றது. அத்துடன் வடக்கில் 30வருட காலமாக பயங்காரவாதத்துக்கு உதவியளித்த வடக்கு மக்களுக்கும் இன்று நாம் மின்சாரத்தை வழங்கியுள்ளோம். எனவே பயங்கரவாதப் பிடியில் இருந்து மீண்ட மக்கள் மின்சாரத்தின் துணையூடன் தமது வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ள நாம் உதவி புரிகிறோம். மேலும் இம் மூன்று திட்டம் மட்டுமல்ல அம்பாறை மாவட்டம் முழுவதுக்கும் மின்சார வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க நாம் இன்னும் 35 மின் திட்டங்களை இப்பிரதேசத்தில் அமுல்படுத்த திட்டமிட்டுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்டத்தில் இதுவரை காலமும் மின்சார வசதி கிடைக்காத 224 குடும்பங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. இவ் மின்சார விநியோகத் திட்டம் அமைப்பதற்காக 5.42 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இதன்படி போகஸ்வத்தை மின் திட்டம், கதுருகொட நாமல் ஓயா மின் திட்டம், அம்பகஹவெல மின் திட்டம் ஆகியனவற்றையே நேற்றைய தினம் அமைச்சர் மக்களிடம் கையளித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.