பக்கங்கள்

25 ஆகஸ்ட் 2012

கண்ணிவெடி அகற்றும் அதிகாரிகளை அவசரமாக வீட்டுக்கு அனுப்புகிறது அரசு!

இறுதிப் போரின் போது அரச படைகள் கொத்துக் குண்டுகள் எனப்படும் கிளஸ்ரர் குண்டுகளை பயன்படுத்தியமையை வெளிக்கொணர்ந்த சம்பவத்தின் பின்னணியில் இருந்ததாக குறிப்பிடப்படும் கண்ணி வெடியகற்றல் அதிகாரிகளை வீட்டிற்கு அனுப்பும் நடவடிக்கைகளை அரசு அவசர அவசரமாகச் செய்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வடக்கில் முன்னெடுக்கப்படும் கண்ணிவெடி அகற்றும் பணிகளை ஐ.நா. சபையின் ஒருங்கிணைப்பின் மூலம் குழு ஒன்று நியமிக்கப்பட்டு மேற்பார்வை செய்யப்பட்டு வருகின்றது. குறித்த மேற்பார்வை அலுவலகம் திருப்திகரமாக கண்ணிவெடியகற்றல் பணிகள் நடந்திருப்பதாக உறுதியளித்தாலே மக்களை மீளக்குடியமர்த்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும். அவ்வாறான அதிகாரிகளாலேயே வன்னியின் புதுக்குடியிருப்பு பகுதியில் கொத்துக் குண்டுகளை பயன்படுத்தியமை தொடர்பான ஆவணங்கள் வெளியிடப்பட்டன. இதையடுத்தே கண்ணிவெடி அகற்றல் பணிகளுடன் தொடர்புடைய படை அதிகாரிகளை வெளியேற்ற அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. ஏற்கனவே கொத்துக்குண்டு விவகாரம் வெளியில் கசியவந்ததை அடுத்து சில அதிகாரிகளை உயர்மட்டம் நேரடியாகக் கடிந்து கொண்டதையடுத்து அவர்கள் தமது பதவிகளை விட்டு விலகிச் சென்றுள்ளதாக அறியவந்தது. தொடர் அழுத்தங்களை உள்ளுர் பணியாளர்கள் எதிர் கொள்வதனால் கிளஸ்ரர் குண்டுகளை பயன்படுத்தியமை தொடர்பான புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களை வெளியிடாது தொடர்புடைய ஐ.நா. அதிகாரிகள் பின்னடித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மனித நேய கண்ணிவெடியகற்றல் பணி களில் ஈடுபட்டு வரும் ஒரு நிறுவனம் கிளிநொச்சியில் கொத்துக்குண்டுகளைப் பயன்படுத்தியமை தொடர்பாக முழு ஆதாரங்களை மீட்டிருந்த போதும் அதனை அம்பலப்படுத்தியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.