பக்கங்கள்

24 ஆகஸ்ட் 2012

அரசியல் தீர்வைக் காண அரசாங்கம் தவறியமை குறித்து அகாஷியிடம் ஐ.தே.க., த.தே.கூ. கவலை!

அரசியல் தீர்வு காண்பதில் அரசாங்கம் தனது பங்கை சரிவர ஆற்றாமை குறித்து, ஜப்பானிய விசேட தூதுவர் யசூஷி அகாஷியிடம் ஐக்கிய தேசியக் கட்சியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் கவலை தெரிவித்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐ.தே.க தூதுக்குழு யசூஷி அகாஸியை புதன்கிழமை சந்தித்தது. ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர்களான மங்கள சமரவீர, லக்ஷ்மன் கிரியெல்ல, ரவி கருணாநாயக்க ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை அமுல்படுத்தாமை, சுயாதீன ஆணைக்குழுக்களை பலப்படுத்தாமை ஆகியவற்றை ஐ.தே.க. சுட்டிக்காட்டியதாக அரசியல் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இதேவேளை, மீள்குடியேற்றம் அரசியல் பேச்சுவார்த்தைகள் ஆகிய விடயங்கள் தொடர்பாக அகாஷியுடன் தான் கலந்துரையாடியதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்தது. பலாலி அதிஉயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள தமது காணிகளுக்கு 26 வருடங்களாக செல்ல முடியாத நிலையில் 28,000 குடும்பங்கள் இருப்பதாக த.தே.கூ. நாடாளுமன்ற உறுப்பினர். எம்.ஏ. சுமந்திரன் கூறினார். சம்பூரில் 1,500 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் நாடு முழுவதும் ஏறத்தாழ 100,000 பேர் இப்போதும் இடம்பெயர்ந்த நிலையிலுள்ளதாக கருதப்படுவதாகவும் அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.