அவசரமாக இன்று லண்டன் நோக்கி பயணமான முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான மங்கள சமரவீரவின் பயணம் குறித்து உடனடியாக ஆராய்நது விரிவான அறிக்கையை வழங்குமாறு அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் இருந்து அரச புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மங்கள சமரவீர அண்மையில், பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மாவிடம் ராஜபக்ஷ அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பாக செய்த முறைப்பாட்டை அடுத்து, மங்கள சமரவீர மீண்டும் அவசரமாக லண்டன் சென்றிருப்பது குறித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கத் தரப்பினரின் கூடிய கவனத்திற்கு உள்ளாகியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்கவும் திடீரென லண்டன் பயணமாகியிருப்பது அரசாங்கத்தை மேலும் உஷாரடைய செய்துள்ளது.
எதிர்வரும் 18 ஆம் திகதியின் பின்னர் லண்டன் உட்பட ஐரோப்பாவின் சகல அரச நிறுவனங்களும் நத்தார் விடுடுறைக்காக மூடப்பட உள்ள நிலையில், மங்கள சமரவீர லண்டன் சென்றிருப்பது குறித்து அரசாங்கம் கூடிய கவனத்தை செலுத்தியுள்ளது.
அதேவேளை நேற்றிரவு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வீட்டில், ஐரோப்பிய நாடுகளின் தூதுவர்கள் சிலர் மங்கள சமரவீரவை சந்தித்துள்ளனர். இதுவே அவரது பயணம் குறித்து அரசாங்கம் அதிக கவனத்தை செலுத்த காரணமாக அமைந்துள்ளது.
எவ்வாறாயினும் தனது நத்தார் விடுமுறையை ஸ்கொட்லாந்தில் கழிப்பதற்காகவே மங்கள சமரவீர இங்கிலாந்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.