இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் பின் ஒரு லட்சத்து 06 ஆயிரம் பொது மக்களை காணவில்லை என இலங்கைக்கான பீபீசியின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் பிரான்சிஸ் ஹெரிசன் தெரிவித்துள்ளார்.
காணாமல் போனவர்கள் அனைவரும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டு பகுதிகளில் வசித்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசாங்கத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகள் மற்றும் புலம்பெயர்ந்தவர்களை தவிர்த்து ஒரு லட்சத்து 06 ஆயிரம் பேர் காணாமல் போயுள்ளதாக அவர் மிகவும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த காணாமல் போனவர்கள் குறித்து இலங்கை அரசு விளக்கமளித்தே ஆக வேண்டும் என பிரான்சிஸ் ஹெரிசன் வலியுறுத்தியுள்ளார்.
2000 தொடக்கம் 2004ம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் பீபீசி செய்தித் தொடர்பாளராக தான் பணியாற்றியதாகவும் மத்திய வங்கியின் சனத்தொகை தகவலை அடிப்படையாகக் கொண்டு யுத்தத்தின் பின் ஒரு லட்சத்து 06 ஆயிரம் பேர் காணாமல் போயுள்ளதாக கண்டறிந்ததாகவும் தமிழ்நாட்டில் இன்று (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.
மத்திய வங்கியின் சனத்தொகை தகவலில் முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களின் மக்கள் சனத்தொகை குறித்த தகவல் உள்ளடக்கப்பட்டிருந்ததாக அவர் கூறினார்.
´இன்னும் தொடரும் மரணங்கள்´ என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ள புத்தகத்தில் இது குறித்த தகவல் உள்ளடக்கப்பட்டுள்ளது. குறித்த புத்தகம் விரைவில் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படவுள்ளதாக பிரான்சிஸ் ஹெரிசன் தெரிவித்துள்ளார்.
யுத்த காலத்தில் அப்பிரதேசங்களில் வசித்த தாதி, ஆசிரியர், அருட்சகோதரி மற்றும் முன்னாள் போராளிகளின் அனுபவம் மற்றும் அவர்களிடம் இருந்து பெற்ற தகவல்களும் குறித்த புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தகாத செயற்பாடுகள் குறித்தும் புத்தகத்தில் விமர்சிக்கப்பட்டுள்ளதாக பிரான்சிஸ் ஹெரிசன் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.