பக்கங்கள்

06 டிசம்பர் 2012

மக்களை விரட்டி விட்டு நட்சத்திர விடுதி அமைக்கிறது யாழ்,மாநகரசபை!

யாழில் மக்கள் குடியிருப்பு பகுதியில் 28 அரைநிரந்தர வீடுகளை அகற்றி நட்சத்திர ஹோட்டல் ஒன்று நிர்மாணிக்க இன்று (06) அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் யாழ் மாநகர சபை ஆகியவை இணைந்து யாழ் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பண்ணைப் பகுதியிலேயே இந்த ஹோட்டலை நிர்மாணிக்க திட்டமிட்டுள்ளன. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (06) காலை நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக யாழ். பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க மற்றும் யாழ் மாநகர மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா, யாழ் மாவட்ட சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நட்சத்திர ஹோட்டல் அமையவுள்ள பகுதியில் தாம் பலவருடங்களாக வசித்து வந்ததாகவும் அங்கிருந்து வலுக்கட்டாயமாக எழுப்பப்பட்டே இந்த நட்சத்திர ஹோட்டல் அமைக்கப்படுவதாகவும் முன்னர் அங்கு வசித்த மக்கள் கவலை தெரிவித்தனர். அந்த மக்கள் மேலும் தெரிவிக்கையில், 1983ஆம் ஆண்டில் இருந்து இந்த பிரதேசத்தில் வசித்து வருகிறோம். அது அரச காணியாக இருந்த போதும் வீடமைப்பு அதிகார சபையினரால் எமக்கு வீடுகள் அமைத்து தர ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில் 1991ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட யாழ் கோட்டை பிரச்சனை அதனை தொடர்ந்து 1995களில் ஏற்பட்ட இடப்பெயர்வுடன் எமக்கான வீடமைப்பு திட்டம் கிடைக்காமல் போய்விட்டது. இதன்பின்னர் நாம் இந்த காணிகளில் மீள் குடியமர்ந்து எமது சொந்த பணத்தில் இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் செலவளித்து அரை நிரந்த வீடுகள் அமைத்து வசித்து வாழ்ந்தோம். கடந்த சில வாரங்களுக்கு முன்பு இங்குவந்த சிலர் இந்த பகுதியில் ஹோட்டல் ஒன்று கட்டப்போறோம் நீங்கள் இங்கிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என தெரிவித்தார்கள். நாம் எங்கே போவது என கேட்ட போது, இது அரச காணி நீங்கள் இங்கு சட்டவிரோதமாக குடியேறியுள்ளீர்கள், அதுவும் கடந்த ஒருவருடமாகவே இங்கே வசிக்கின்றீர்கள், எனவே நீங்கள் இந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றார்கள். இங்கு வசிக்கும் மக்களுக்காக முத்தமிழ் சனசமூக நிலையம் ஆரம்பிக்கப்பட்டு அது பதிவு செய்யப்பட்டும் இருக்கின்றது என்று கூறினோம். பின்னர் இந்த காணியில் இருந்து 500 மீற்றர் தூரத்துக்கு அப்பால் அரச காணி உள்ளது எனவும் நீங்கள் அங்கே போய் குடியேறுங்கள் என்றும் எம்மை அந்த காணியில் இருந்து அகற்றி விட்டார்கள். அவர்கள் காட்டிய காணியில் நாம் குடியேற போனால் இது என்னுடைய காணி என காணி உரிமையாளர் ஒருவர் காணி உறுதியுடன் வந்து எம்மை அங்கிருந்து விரட்டி விட்டார். இப்போது நாம் காணியும் இன்றி வீடும் இன்றி நண்பர்கள் உறவினர்கள் வீடுகளிலேயே தங்கியுள்ளோம் என அந்த காணியில் இருந்த மக்கள் தெரிவித்தனர். மக்களின் இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக யாழ் மாநகர சபை மேயரிடம் கேட்ட போது, இக் காணி அரச காணியாகும். இங்கு சட்டவிரோதமாக குடியேறியவர்களையே நாம் இங்கிருந்து வெளியேற்றி உள்ளோம். ஆனாலும் நாம் அவர்கள் குடியிருக்க வேறு ஒரு காணி வழங்கியுள்ளோம் என்றார். அவர்களுக்கு கொடுத்த காணி அரச காணி இல்லை. தனியார் ஒருவருக்கு சொந்தமான காணி என மக்கள் தெரிவித்ததாக ஊடகவியலாளர்கள் மேயரிடம் கேட்ட போது, அப்படியா? அப்படியாயின் அந்த காணி தொடர்பாக பிரேதேச செயலரையே கேட்க வேணும் என்று கூறினார். புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள ஹோட்டல் பற்றி கூறுகையில், நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் யாழ் மாநகரசபை ஆகியவை இணைந்தே யாழ்ப்பாணத்தில் இந்த ஹோட்டலை நிர்மானிப்பதாகவும் 250 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளதாகவும் இந்த ஹோட்டலில் அரச ஊழியர்கள் குறைந்த செலவில் சேவையைப் பெறக்கூடியதாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.