பக்கங்கள்

08 டிசம்பர் 2012

புலிகள் ஜனநாயகத்தை மதிக்கவில்லையாம் அரசின் கால்களில் விழுந்த சம்பந்தன்!

தமிழ் மக்கள் அவர்களின் வாழ்க்கையில் போரை மறந்து விட தயாராக இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் நேற்று (07) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். வடக்கு கிழக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்ற வேண்டும் என நாம் கூறுவதாக தவறான கருத்து ஒன்று நிலவுகிறது. அது தவறானது. ஏனைய மாகாணங்களில் உள்ளதை போன்று இராணுவம் வடக்கு, கிழக்கிலும் இருக்க வேண்டும். தமிழ் மக்களுக்கு அழுத்தங்கள் ஏற்படாத வண்ணம் இராணுவம் அங்கு இருக்க வேண்டும். மக்களின் பாதுகாப்புக்காகவே இராணுவம் இருப்பதாக மக்கள் உணரும்படியாக இராணுவம் இருக்க வேண்டும். மக்களுக்கு தடையில்லாத வகையில் இராணுவம் தமது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். நாம் சட்டரீதியாக அகிம்சை வழியில் போராட்டங்களை முன்னெடுத்தோம். எனினும் 71 ஆம் 83 ஆம் ஆண்டுகளில் நெருக்கடியான நிலைமை ஏற்பட்டது. ஐக்கிய இலங்கைக்குள், தமிழ் மக்களுக்கு அரசியல் சுதந்திரத்தை பெற்றெடுப்பதற்காக அமைதியான போராட்டங்களை நடத்தி அதனை பெற்றுக்கொள்ளும் தேவை எமக்குகிருந்தது. எனினும் இந்த நாட்டின் அரசாங்கங்களின் தவறுகள் காரணமாகவே விடுதலைப்புலிகள் அமைப்பு உருவானது. நாங்கள் ஜனநாயகத்தை மதிக்கின்றோம். எனினும் விடுதலைப்புலிகள் ஜனநாயகத்தை மதிக்கவில்லை. இதனால் அவர்கள் அழிவை தேடிக்கொண்டனர். எனினும் விடுதலைப்புலிகள் அமைப்பு இல்லாமல் போனது போன்று, தமிழ் மக்களின் பிரச்சினைகள் முடிவுக்கு வரவில்லை. அந்த பிரச்சினைக்கு தீர்வு தேட வேண்டும். அண்மையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்கள் சிலர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார்.ட அவர்கள் உயிரிழந்த தமது உறவுகளை நினைவுக் கூறுவதற்காகவே விளக்குகளை ஏற்றினர். அது அவர்களின் கடமை. கார்த்திகை தீபத் தினத்தில் முருகனை வணங்க அவர்களுக்கு உரிமை உள்ளது. கைதுசெய்யப்பட்டுள்ள மாணவர்களை விடுதலை செய்யுங்கள். நான் வடக்கில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும் எனக் கூறவில்லை. தற்போது அரசாங்கம் தமிழ் மக்களுக்கு சுதந்திரமாக வாழ இடமளிக்க வேண்டும். எமக்கும் ஒரு கௌரவம் இருக்கிறது. புதிதாக கட்டப்பட்ட வீடுகளில் இருந்து இராணுவத்தினர் வெளியேற வேண்டும். இவர்கள் மக்களின் விகிதாசாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். வடக்கு, கிழக்கு வாசிகள் என பதிவு செய்வதற்காகவே இது மேற்கொள்ளப்படுகிறது. இது நிறுத்தப்பட வேண்டும் என இரா. சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தமிழ் மக்கள் உருவாக்கவில்லை எனவும், அடுத்தடுத்து ஆட்சி பீடமேறிய அரசாங்கங்களே புலிகளை உருவாக்கியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். புலிகள் அமைப்பு உருவாகுவதற்கான காரணங்கள் காணப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளினால் தாம் கொல்லப்படாத காரணத்தினால் தம்மை புலிகளின் பிரதிநிதிகள் என சிலர் அழைப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக பாரியளவில் சர்வதேச ஆதரவினை திரட்டும் பணிகளில் அமரர் லக்ஸ்மன் கதிர்காமர் முன்னணி வகித்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், யுத்தத்தின் பின்னரான வடக்கின் நிலைமைகளை பார்வையிட்டால் அவர் மிகவும் வருத்தமடைவார் என சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார். 30 ஆண்டு கால யுத்தம் முடிவடைந்துள்ளதாகவும், மக்கள் அதிலிருந்து மீண்டு செல்ல வேண்டுமென விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு விட்ட காரணத்தினால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கத் தேவையில்லை என்ற நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கில் இராணுவத்தினரை நிலைநிறுத்தக் கூடாது என தமிழர்கள் கருதுவதாக ஓர் நிலைப்பாடு காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், இந்த நிலைப்பாடு முற்றிலும் பிழையானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு கிழக்கில் இராணுவத்தின் பிரசன்னம் தேவையில்லை என தாம் ஒருபோதும் கோரவில்லை என அவர் தெரிவித்துள்ளார். மாறாக, தற்போது வடக்கு கிழக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதனைப் போன்று இராணுவத்தினர் நிலைநிறுத்தப்படக் கூடாது என்பதே தமது நிலைப்பாடு என அவர் தெரிவித்துள்ளார். நாட்டின் ஏனைய பகுதிகளில் வாழ்ந்து வரும் மக்களை விடவும் தமிழர் வித்தியாசமானர்கள் என்ற ஓர் நிலைப்பாட்டை ஏற்படுத்தும் வகையில் தற்போது வடக்கு கிழக்கில் படையினர் குவிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். ஜே.வி.பி கட்சி உயிர் நீத்தவர்களுக்காக நினைவு நிகழ்வுகளை நடாத்தி வருகின்றது, அதனை எவரும் எதிர்ப்பதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும், இறந்த மகனுக்காக, யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்காக ஓர் தீபமேற்றி நினைவு கூர்வதில் என்ன பிழையிருக்கின்றது என சம்பந்தன் கேள்வி எழுப்பியுள்ளார். வடக்கில் 150000 படைவீரர்கள் குவிக்கப்பட்டுள்ளதாகவும், இது அவசியமற்றது எனவும் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.