பக்கங்கள்

29 டிசம்பர் 2012

மண்டைதீவில் நான்கு வயதுச் சிறுமி ஒருவர் வன்புணர்வின் பின்னர் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொலை!

நான்கு வயதுச் சிறுமி ஒருவர் வன்புணர்வின் பின்னர் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது சடலம் நேற்றுத் தோட்டக் கிணறு ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். இந்தக் கொடூரச் சம்பவம் மண்டைதீவு 2ஆம் வட்டாரப் பகுதியில் இடம் பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவம் பற்றித் தெரியவருவதாவது: மண்டைதீவு 2ஆம் வட்டாரப் பகுதியில் உள்ள புகையிலைத் தோட்டக் கிணறு ஒன்றை இறைப்பதற்காக சென்றவர்கள் அந்தக் கிணற்றுக்குள் சடலம் ஒன்று இருப்பதைக் கண்டு ஊர்காவற்றுறைப் பொலிஸாருக்குத் தகவல் கொடுத்தனர். பொலிஸார் இது குறித்து ஊர்காவற்றுறை நீதிவான் ஆர்.எஸ்.எம்.மகேந்திரராசாவின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர். சம்பவ இடத்துக்குச் சென்ற நீதிவான் சடலத்தைப் பார்வையிட்ட பின்னர் சந்தேகம் நிலவியதை அடுத்து பரிசோதனைக்கு உத்தரவிட்டார். இதையடுத்து யாழ்.போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி எஸ்.சிவரூபன் அங்கு சென்று சடலத்தைப் பார்வையிட்டதுடன் முதற்கட்ட உடற்கூற்றுப் பரிசோதனையையும் மேற்கொண்டார். இதன்போது சிறுமி வன்புணர்வின் பின்னர் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்தார். குறித்த சிறுமி நேற்று முன்தினம் ஒரு மணிக்குப் பின்னர் வீட்டில் இருந்து காணாமற் போனதாகவும் பெற்றோர் தேடியும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தநிலையில் நேற்று அவரது வீட்டுக்கு 200 மீற்றர் தூரத்தில் உள்ள தோட்டக்கிணறு ஒன்றில் இருந்து அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.