ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் கழிவு குவியலுக்குள் விமல் வீரவன்ச விழுந்துள்ளதாகவும் அதிகாரத்தை தக்கவைப்பதற்காக வீரவன்சவுக்கு செய்ய முடியாதது ஒன்றுமில்லை எனவும் சில நேரம் நீதிமன்றத்திற்கும் அவர் சவால் விடுப்பதாகவும் ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமந்த வித்தியாரத்ன தெரிவித்துள்ளார். எனினும் அந்த கழிவுக்குவியலில் விழுந்த பின்னால், அதன் நாற்றம் முழு நாட்டிலும் வீசுகிறது. எதிர்காலத்தில் இந்த நாற்றம் மேலும் அதிகரிக்கும். அவரது பயணம் வெகுதூரத்தில் இல்லை. இவை மக்களால் நிராகரிக்கப்படும் வேலைகள்.
கட்சி தலைவர் முதல் 60 ஆயிரம் பேர் கொலை செய்யப்பட்ட போதிலும், ஜே.வி.பி என்ற கட்சி எப்போதும் வீழ்ச்சியடைந்ததில்லை. சாம்பலையும் தூசிகளையும் தட்டி விட்டு எழுந்து மீண்டும் மக்களுடன் எதிர்கால பயணத்தை மேற்கொள்ள ஜே.வி.பி தயாராக உள்ளது. வாக்குகளை வைத்து ஜே.வி.பியை அளவிட முடியாது. கடந்த காலம் முதல் சவால்களையும் தடைகளையும் ஜே.வி.பி எதிர்நோக்கி வந்துள்ளது.
தற்போது ஆட்சியில் இருப்பவர், மக்களுக்கு பொறுப்பு கூறும், மக்கள் தேவைகளை நிறைவேற்றும் ஆட்சியாளர் அல்ல. அவர் குடும்பத்தின் தேவைக்காக செயற்பட்டு வருகிறார். இதனை மக்கள் புரிந்து கொண்டால் மாத்திரமே நிலைமையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். உண்மையான தலைவர் ஒருவரின் கீழ் மக்கள் அணித்திரண்டு இந்த ஆட்சியை மாற்ற வேண்டும்.
ராஜபக்ஷ அனைத்து விடயங்களிலும் தலையீடு செய்கிறார். தற்போது நீதிமன்றத்தில் தலையிட்டு அதனை அடக்க பார்க்கின்றார்.மக்களுக்கு உண்மையை தெரிவிக்கும் ஊடகவியலாளர்களை அடக்க முயற்சிக்கின்றனர். பல்கலைக்கழக விரிவுரையாளர்களை மதிப்பதில்லை. நாட்டில் உள்ள மத தலைவர்களின் அறிவுரைகளுக்கு செவிமடுப்பதில்லை. வெற்று காகிதங்களில் கையெழுத்திடும் நிலைமைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற தீர்மானத்துடனேயே அரசாங்கம், பிரதம நீதியரசருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்துள்ளது. அரசாங்கத்தின் இந்த தீர்ப்பை நாட்டுக்கும், சர்வதேசத்திற்கும் நியாயப்படுத்துவதற்காக தெரிவுக்குழு ஒன்றை நியமித்துள்ளனர். தனக்கு அடிப்பணிந்த நீதிமன்றத்தை முன்னெடுத்து செல்லும் தேவையே ராஜபக்ஷவுக்கு உள்ளது. மக்கள் மத்தியில் மக்களை அணித்திரட்டுவதன் மூலம் அவற்றை தோற்கடிக்க முடியும் எனவும் சமந்த வித்தியாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.