விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், புலனாய்வுப் பொறுப்பாளர் பொட்டுஅம்மான், கடற்புலிகளின் தளபதி சூசை போன்றோர், சிறிலங்கா இராணுவ முற்றுகையை உடைத்துக் கொண்டு தப்பிச் சென்றிருக்கலாம் என்று சிறிலங்கா இராணுவத்தின் உயர்மட்ட அதிகாரிகள் பலரும் கருதினர் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
போரின் இறுதிக்கட்டத்தில் சவேந்திர சில்வாவை பதவியில் இருந்து நீக்குவதற்கு பொன்சேகா முற்பட்டதாகத் தெரிவித்து குறித்த ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது,
அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,2009 மே 17ஆம் திகதி அதிகாலை 3 மணியளவில், முள்ளிவாய்க்கால் முற்றுகையை உடைத்துக் கொண்டு நந்திக்கடல் வழியாகத் தப்பிச்செல்வதற்கு விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலை அடுத்தே மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை 58வது டிவிசன் தளபதி பதவியில் இருந்து நீக்க சரத் பொன்சேகா முடிவு செய்திருந்தார்.
அந்தக் கட்டத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், புலனாய்வுப் பொறுப்பாளர் பொட்டுஅம்மான், கடற்புலிகளின் தளபதி சூசை போன்றோர், சிறிலங்கா இராணுவ முற்றுகையை உடைத்துக் கொண்டு தப்பிச் சென்றிருக்கலாம் என்று சிறிலங்கா இராணுவத்தின் உயர்மட்ட அதிகாரிகள் பலரும் கருதினர்.
மே17ஆம் திகதி நள்ளிரவு நெருங்கும் நேரத்தில் சீனப் பயணத்தை முடித்து திரும்பிய அப்போதைய சிறிலங்கா இராணுவத்தளபதி சரத் பொன்சேகா, பின்னடைவுக்கு பொறுப்பானவர்களை கண்டித்ததுடன் சூடாகவே நடந்து கொண்டார். களநிலவரங்களை மீளாய்வு செய்த சரத் பொன்சேகா, விடுதலைப் புலிகளின் தாக்குதல் நெருக்கடியை மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா மூலம் கையாள விரும்பினார்.
அதேவேளை, அவர் வகித்து வந்த 58வது டிவிசன் கட்டளைத் தளபதி பதவியை, அப்போது 59 வது டிவிசனின் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவிடம் ஒப்படைத்து விடும்படியும் அவர் பரிந்துரைத்தார்.
2009 மே 18ஆம் திகதி அதிகாலை விடுதலைப் புலிகளின் இரண்டாவது முறியடிப்பு முயற்சி மேற்கொள்ளப்படுவதற்கு முன்னதாக இந்தத் திட்டம் முன்வைக்கப்பட்டது. ஆனால், அதற்கு மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா ஒப்புக் கொள்ளவில்லை. தன்னால் இரண்டு பொறுப்புகளையும் கையாள முடியும் என்று அவர் சரத் பொன்சேகாவுக்கு வாக்குறுதி அளித்தார்.
அப்போது வன்னிப்ப டைகளின் கட்டளைத் தளபதியாக இருந்த தற்போதைய இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவும், சவேந்திர சில்வாவின் சார்பாக சரத் பொன்சேகாவிடம் பரிந்து பேசியிருந்தார் என்றும் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.