பக்கங்கள்

03 டிசம்பர் 2012

தீவகம் உட்பட பல இடங்களை படைக்கு தாரைவார்க்க டக்ளஸ் நடத்திய இரகசிய கூட்டம்!

யாழ்.குடாநாட்டில் சகல பிரதேச செயலர் பிரிவுகளிலுமாக 179 இடங்களைத் தமக்குத் தருமாறு இராணுவத்தினர் கோரியுள்ளது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அறிக்கை சமர்ப்பிக்க நேற்றுக் கூட்டமொன்றை நல்லூர் பிரதேச செயலகத்தில் கூட்டியுள்ளார். இந்தக் கூட்டத்துக்கு கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட சபைகளின் தவிசாளர்களுக்கு எந்த அறிவிப்பும் விடுக்கப்படவில்லை. யாழ்.அரச அதிபர், மேலதிக அரச அதிபர், திணைக்களத் தலைவர்கள் மற்றும் ஈ.பி.டி.பி. வசமுள்ள சபைகளின் தவிசாளர்களுக்கும், ஏனைய சபைகளின் எதிர்க்கட்சியான ஈ.பி.டி.பி உறுப்பினர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. கூட்டத்தில் கதைக்கப்படும் விடயங்கள் ஊடகங்களில் வரக்கூடாது. வரையறுக்கப்பட்டே ஊடகங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. என்றும் டக்ளஸ் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். யாழ்.குடாநாட்டில் சகல பிரதேச செயலர் பிரிவுகளிலும் 179 இடங்களை படையினர் தமக்குத் தரும்படி கோரியுள்ளனர். கடந்த முறை படையினர் கோரியதையும் விட இந்த எண்ணிக்கை பரப்பளவில் அதிகம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது. வேலணை13, மருதங்கேணி26, தெல்லிப்பழை26 நல்லூர்16, கோப்பாய்11, கரவெட்டி3, பருத்தித்துறை2 சண்டிலிப்பாய்2, நெடுந்தீவு7, சங்காணை6, யாழ்ப்பாணம்13, சாவகச்சேரி40 ,ஊர்காவற்றுறை9 என 179 இடங்கள் இராணுவத்தினரால் கோரப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவுகளிலும் கடந்த கூட்டங்களில் கேட்கப்பட்டதை விட நேற்று அதிகளவான இடங்கள் கோரப்பட்டுள்ளமை பற்றியும் சபையில் கூறப்பட்டுள்ளது. அரச காணிகள், தனியார் காணிகள், திணைக்களங்களுக்கு சொந்தமான காணிகள் மற்றும் படையினர் வசமுள்ள காணிகள் உள்ளடங்கலாக இந்த எண்ணிக்கை உள்ளது. அமைச்சர் டக்ளஸ் இந்த விடயங்களை எடுத்துக்கூறிய போது அரச அதிகாரிகள் எவரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. அந்த நேரம் எழுந்த வலி.தென்மேற்கு சபைத் தலைவர் அ.ஜெபநேசன் இந்தக் காணிகளுக்கான கோரிக்கைகள் தரவுகளா அல்லது உறுதிப்படுத்தப்பட்டவையை என்று டக்ளஸிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு டக்ளஸ், உம்மை யார் இந்தக் கூட்டத்துக்கு அழைத்தது உங்களுக்கு அழைப்பிதல் அனுப்பவில்லையே என்று கேள்வி எழுப்பினார். அதற்கு ஜெபநேசன் "பொதுமக்கள் பிரதிநிதிகளான எமக்கு பொறுப்பு இருக்கிறது இது பற்றி எமக்குத் தெரிவிக்க வேண்டும். எமக்குத் தெரியாமல் எதுவும் செய்ய முடியாது என்றார். மேலும் சபையின் செயலருக்கு சுகவீனம் ஆகையால் நான் வந்திருக்கிறேன்' என்று கூறினார். அதற்கு அமைச்சர் டக்ளஸ் இந்த விவரங்களை ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுசெல்லவுள்ளேன் என்றார். ஜனாதிபதி விடயமாகவிருப்பதனால் முக்கிய விடயமாகவே இருக்கும் என்று கூறிய ஜெபநேசன் அங்கீகாரத்துக்காக கேட்கிறீர்களா என்று கேட்டார். அதற்கில்லை என்றார் அமைச்சர். நேற்றைய கூட்டத்தில் காணிப்பிரச்சினை தவிர இந்தியன் வீட்டுத்திட்டம், பொருளாதார அபிவிருத்தி வேலைகள் உட்பட பல விடயங்கள் பிரஸ்தாபிக்கப்பட்ட போதும் முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.