பக்கங்கள்

18 டிசம்பர் 2012

பிறையன் செனிவிரத்னவை திருப்பி அனுப்பியது குறித்து சிங்கப்பூர் அதிகாரிகள் விளக்கம்!

News Serviceஅவுஸ்ரேலியாவில் வதியும் மனிதஉரிமை செயற்பாட்டாளரான மருத்துவர் பிறையன் செனவிரத்னவை திருப்பி அனுப்பிய விவகாரம் குறித்து சிங்கப்பூர் அதிகாரிகள் அவுஸ்ரேலிய ஊடகம் ஒன்றுக்கு விளக்கம் அளித்துள்ளனர். மலேசியாவில் தமிழ் அமைப்புகளின் கூட்டத்தில் சிறிலங்கா அகதிகள் விவகாரம் குறித்துப் பேசுவதற்காக சிங்கப்பூர் வழியாகச் செல்லவிருந்த 81 வயதான மருத்துவர் பிறையன் செனிவிரத்னவை, சிங்கப்பூர் அதிகாரிகள் சிறியதொரு அறைக்குள் 5 மணிநேரம் அடைத்து வைத்திருந்ததுடன், அவருக்கு உணவு, குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகளைக் கூட வழங்க மறுத்திருந்தனர். இதுகுறித்த தகவல் அவுஸ்ரேலிய ஊடகமொன்றுக்கு சிங்கப்பூர் குடிவரவு மற்றும் சோதனை அதிகாரசபை அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. “பெரும்பாலான நாடுகளைப் போலவே, சிங்கப்பூரிலும் ஒரு விருந்தினர் தன்னியக்க முறையில் உள்நுழைய அனுமதிக்கப்படுவதில்லை. ஒவ்வொரு நுழைவுச் சந்தர்ப்பத்திலும் அவரது தகுதியை நிரூபிக்கவேண்டும். அவர்கள் நுழைவதற்கு முன்னர் உள்நுழைவதற்கான எமது தேவைப்பாடுகளை நிறைவு செய்ய வேண்டும். தகுதியற்றவர்களுக்கு நுழைவு அனுமதி மறுக்கப்படும். மருத்துவர் பிறையன் செனிவிரத்ன தொடர்பான விவகாரம் குறித்து குடிவரவு மற்றும் சோதனை அதிகாரசபை விசாரணை நடத்திய போது, சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக அவர் வெளியிட்ட தகவலில் உண்மையில்லை என்று கண்டறியப்பட்டது. மருத்துவர் பிறையன் செனிவிரத்ன கடந்த 14ம் நாள் காலையில் சிங்கப்பூர் வந்தார். அவர் எமது குடிவரவுச் சாவடியில் சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதி கோரினார். அவர் நுழைவு அனுமதி பெறத்தகுதியற்றவராக இருந்தார். இந்த முடிவு கடமையில் இருந்த குடிவரவு அதிகாரியால் அவருக்குத் தெரியப்படுத்தப்பட்டது. இரண்டரை மணி நேரத்துக்குள் அவரை நாட்டை விட்டு வெளியேறும்படி அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. இந்தநிலையில் அவருக்கு உணவு. குடிநீர், கழிப்பிட வசதிகளைச் செய்து கொடுப்பதற்கு நேரம் இல்லை. அவர் அவற்றைக் கோரியிருந்தாலும் அது நிராகரிக்கப்பட்டிருக்கும்.” என்று சிங்கப்பூர் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். அதேவேளை, அவுஸ்ரேலிய வெளிவிவகாரத் திணைக்களமும் இந்த விவகாரம் தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், சிங்கப்பூரில் இருந்து அவுஸ்ரேலிய குடிமகன் ஒருவர் திருப்பி அனுப்பட்ட தகவல்கள் ஊடகங்கள் மூலம் அறிந்து கொண்டுள்ளோம். அவர் திருப்பி அனுப்பப்படுவதற்கு முன்னதாக அவுஸ்ரேலிய தூதரக அதிகாரிகளை உதவிக்கு அணுகவில்லை.” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.