பக்கங்கள்

30 டிசம்பர் 2012

மாணவர்கள் விவகாரத்தில் கோத்தா விடாப்பிடி!

கைதாகித் தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரையும் புனர்வாழ்வு வழங்காமல் விடுவிக்கவே முடியாது. இவ்வாறு அடித்துக் கூறியிருக்கிறார் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ.கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு நேற்று வழங்கிய விசேட செவ்வி ஒன்றிலேயே அவர் இவ் வாறு கூறியிருக்கிறார். புனர்வாழ்வு வழங்காமல் மாணவர்களை விடுவிக்க முடியாது என்ற விடயத்தை யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் உட்பட பல்கலைச் சமூகத்துக்கு தான் ஏற்கனவே தெரிவித்து விட்டதாகவும் அதனை அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் கோத்தபாய இந்தச் செவ்வியில் தெரிவித்துள்ளார். அவர் அந்தச் செவ்வியில் மேலும் தெரிவித்தாவது: கைதாகித் தடுத்து வைக்கப்பட்டுள்ள நான்கு பல்கலைக்கழக மாணவர்களையும் புனர்வாழ்வு வழங்கிய பின்னரே விடுவிக்க முடியும். அதற்கு முன்னர் அவர்கள் விடுவிக்கப்படுவதற்கு சாத்தியமே இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாழ்.பல்கலைக்கழகத்துக்குள் ஏன் போகவேண்டும்? அவர்களுக்கு அங்கு என்ன வேலை? பல்கலைக்கழகத்துக்குள் சென்று இவர்கள் பயங்கரவாதத்தைத் தூண்டு விடுகிறார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இளைஞர் அணி தலைவரின் பின்னணியிலேயே கடந்த காலச் சம்பவங்கள் நடந்துள்ளன. இவற்றை நாங்கள் ஆதாரத்துடன் நிரூபிப்போம். மாணவர்களுக்கு புனர்வாழ்வு வழங்கிய பின்னரே அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்ற விடயம் யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தர் உட்பட பல்கலைக்கழக சமூகத்திடம் நான் ஏற்கனவே தெரிவித்துவிட்டேன். அவர்களும் அதனை ஏற்றுக் கொண்டுள்ளனர். மாணவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால் நாங்கள் அவ்வாறு செய்யவில்லை. அதற்குப் பதிலாக அவர்களுக்குப் புனர்வாழ்வளிக்கின்றோம். என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.