தமிழ் மாணவர்களது விடுதலைக்காக தமிழ் தரப்புக்கள் மீண்டும் இன்று ஒன்று கூடிய அதிசயம் யாழ்ப்பாணத்தில் இன்று நடந்துள்ளது.தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் அழைப்பு விடுக்கப்பட்ட மக்கள் போராட்டத்திற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு மற்றும் வணிகர் கழகம்,பல்லைக்கழக மாணவர் ஒன்றியம் ஆசிரிய சங்கம்,மருத்துவர்கள் சங்கம்,சட்டத்தரணிகள் சங்கமென பல தரப்புகளும் இன்று பேதங்களை மறந்து மாணவர்கள் மீதான தாக்குதல்களை கண்டித்தும் அவர்களது விடுதலையினை வலியுறுத்தி ஒருமித்து குரல் எழுப்பின.
காலை 11 மனியளவில் யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பதாக ஒன்று குவிந்த ஆர்ப்பாட்டகாரர்கள் சுமார் ஒன்றரை மணி நேரமாக இவ்வார்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் தெற்கிலிருந்து நவசம சமாஜக்கட்சி மற்றும் புதிய இடது சாரி முன்னணி,ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் புதிய ஜனநாயக மார்க்சிய லெனினியக்கட்சி என பல தரப்புக்களும் நேரில் பிரசன்னமாகி போராட்டத்தில் குதித்திருந்தன.
எங்கள் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தவும் தடையா? ஊடகவியலாளர்களை தாக்காதே இராணுவமே வெளியே போ சிறி டெலோ தமிழ் மாணவர்களுக்கு துரோகமிழைக்காதே என பல கோசங்களும் எழுப்பப்பட்டது.தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் குமார் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் செயலாளர் கஜேந்திரன் கூட்டமைப்பு சார்பில் அதன் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா,சுரேஸ்பிறேமச்சந்திரன்,சரவணபவன்,சிறீதரன் ஆகியோரும் ஜனநாயக மக்கள் முன்னணியின் கொழும்பு மாநகர உறுப்பினர் பாஸ்கரா ஆகியோரும் கலந்து கொண்டனர்.கொழும்பில் பிரதம நீதியரசர் விவகாரம் காரணமாக கண்டன ஆர்ப்பாட்டமொன்று அதே காலப்பகுதியில் நடந்தமையால் பல முக்கியஸ்தர்கள் தமது பிரதிநிதிகளை மட்டும் அனுப்பி தமது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தனர்.
ஆர்ப்பாட்டகாரர்களை சூழ படையினர் மற்றும் பொலிஸார் இராணுவ புலனாய்வு பிரிவினரென பலரும் குவிந்திருந்தனர்.பங்கெடுத்த பிரதிநிதிகளை படமெடுப்பதில் அவர்களும் ஊடகவியலாளர்களுக்கு போட்டியாக ஈடுபட்டிருந்தனர்.எந்நேரமும் வன்முறை ஏதும் நடக்கலாமென்ற அச்சமான சூழல் காணப்பட்டது.இராணுவ வாகனங்கள் வீதியின் குறுக்கும் நெடுக்குமாக பறந்து திரிந்தன.இவ்வேளைகளில் எல்லாம் கோசங்கள் வானை தொட்டன.
மாணவர்கள் மீதான வன்முறையை கண்டித்தும் அவர்களது விடுதலையை வலியுறுத்தியும் ஜ.நாவிற்கான மகஜரொன்று பங்கெடுத்தவர்களது ஒப்பத்துடன் அனுப்ப ஏற்பாடாகியிருந்தது. இதனிடையே தற்போதைய பல்கலைக்கழக சூழல் தொடர்பாகவும் அடுத்த கட்ட நகர்வு தொடர்பாகம் ஆராய முக்கிய சந்திப்பொன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தினில் நடந்து கொண்டுள்ளது.பாகுபாடு ஏதமின்றி கூட்டமைப்பின் தலைமையும் இச்சந்திப்பினில் கலந்து கொண்டுள்ளதாக பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.