இலங்கைப் போரின் இறுதிப் பகுதியில் அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த 'பாதுகாப்பு வலயப் பகுதி' முழுமையாக அழிக்கப்பட்டிருந்த காட்சியை தான் நேரில் பார்த்ததாக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் இராஜதந்திரிகளிடம் தெரிவித்ததாக அமெரிக்க தூதரக கேபிள்களை ஆதாரம்காட்டி விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள பிந்திய தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடம்பெயர்ந்தவர்களுக்காக வவுனியா, செட்டிகுளம் பகுதியில் அமைக்கப்பட்ட மெனிக் பாம் முகாம் இதற்கு முன்னர் தான் பார்த்த எதனையும் விட மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டது எனவும் பான் கீ மூன் தெரிவித்திருக்கின்றார்.
விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்த இரு நாட்களின் பின்னர் கொழும்பு வந்து, போர்ப் பகுதிகளை ஹெலிக்காப்டரில் சென்று பார்வையிட்ட பின்னர், மெனிக் பாம் முகாமையும் பான் கீ மூன் பார்வையிட்டார். அதன் பின்னர் 2009 மே 23 ஆம் திகதி இரவு கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இணைத் தலைமை நாடுகளின் தூதுவர்களுக்கு நிலைமைகளை விளக்கிய போதே இந்தத் தகவல்களை பான் கீ மூன் தெரிவித்தார்.
மெனிக் பாமில் காணப்பட்ட நிலைதொடர்பாக நோர்வே நாட்டுத் தூதுவர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த பான் கீ மூன், "மிகவும் மோசமான கவலையான நிலை" காணப்படுவதாகத் தெரிவித்தார்.
போரினால் இடம்பெயர்ந்த இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் அப்போது முகாமில் இருந்தார்கள். "டாபர் (Darfur) மற்றும் கோமா (Goma) உட்பட எந்த ஒரு முகாமிலும் காணப்பட்டதைவிட மிகவும் மோசமான நிலை அங்கு காணப்பட்டது" என மெனிக் பாம் முகாமின் நிலை தொடர்பாக இராஜதந்திரிகளுக்க மூன் விளக்கினார்.
விடுதலைப் புலிகளுடனான போரில் தாம் வெற்றி பெற்றுள்ளதாக அரசாங்கம் அறிவித்த பின்னர், கொழும்பு வந்த பான் கீ மூன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகல்லாகம உட்பட சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகள் பலரையும் சந்தித்தார். அதன் பின்னர் போர் இடம்பெற்ற பகுதிகளைப் பார்வையிட்ட பின்னர் மெனிக் பாம் முகாமுக்கு அவர் சென்றார்.
அரசாங்கத்தினால் பாதுகாப்பு வலயம் எனப் பிரகடனப்படுத்தப்பட்ட பகுதிகளின் நிலை தொடர்பாக இராஜதந்திரிகள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த மூன், அந்தப் பகுதி முழுமையாக அழிந்துபோய்காணப்பட்டதாகத் தெரிவித்தார்.
இது தொடர்பான தகவல்களை அமெரிக்க தூதரக அதிகாரியான மூன் மே 27 ஆம் திகதி அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்கு அனுப்பிவைத்த இரகசிய கேபிளில் தெரிவித்திருப்பதாக இன்று காலை விக்கிலீக்ஸ் செய்தி வெளியட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.