பக்கங்கள்

03 செப்டம்பர் 2011

மட்டக்களப்பில் பெண்களின் தொகையை கணக்கெடுக்கும் படைகள்!

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகப் பிரிவில் வாழும் பெண்களின் விபரங்கள் இராணுவத்தினரால் பிரதேச செயலாளரிடம் கோரப்பட்டுள்ளமை குறித்து மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தனது அதிருப்தியையும் ஆட்சேபனையையும் தெரிவித்துள்ளார்.
ஒந்தாச்சிமடம் இராணுவ முகாம் பொறுப்பதிகாரியினால் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பெண்களின் விபரங்கள் கோரப்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினரால் பாராளுமன்ற உறுப்பினரின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தை நேரில் சந்தித்து என்ன காரணத்திற்காக பெண்களின் விபரங்கள் திரட்டப்படுகிறது என்று கோரியதுடன் இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதனையடுத்து களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளரிடம் தொடர்பு கொண்ட அரசாங்க அதிபர் இதுபற்றிய முழுவிபரத்தையும் கேட்டறிந்த பின்பு மட்டக்களப்பு மாவட்ட இராணுவ கட்டளையதிகாரி பிரிகேடியர் திலகரெட்னவின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசாவினால் இந்த விடயம் தனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அவர் இராணுவ கட்டளை அதிகாரியின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
இதையடுத்து குறித்த விடயங்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட முகாம் பொறுப்பதிகாரிக்கு இராணுவ கட்டளை அதிகாரியினால் பதிலளிக்கப்பட்டது. அதே வேளை குறித்த முகாம் பொறுப்பதிகாரி இது தொடர்பில் பிரதேச செயலாளரைச் சந்தித்த போது அரசாங்க அதிபரின் எழுத்துமூல அனுமதியில்லாமல் உத்தியோகபூர்வ விபரங்கள் எதுவும் வழங்க முடியாதென தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் பெண்களின் விபரங்கள் இராணுவத்தினரால் திரட்டப்படுவது குறித்து தனது அதிருப்தியையும் ஆட்சேபனையையும் தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா அது பற்றி கூறுகையில், ஏற்கனவே மட்டக்களப்பு மாவட்டத்தில் மர்ம மனிதனின் பீதி காரணமாக பெண்கள் அச்சத்துடன் வாழ்கின்றார்கள்.
பாதுகாப்புத் தரப்பினரின் பின்னணியிலே மர்ம மனிதனின் செயற்பாடுகள் இடம் பெறுவதாக ஏற்கனவே பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில் பெண்களின விபரங்களை மட்டும் ஒரு பிரதேசத்தில் திரட்ட முற்படுவது பெண்கள் மத்தியில் மேலும் ஒருவித அச்சத்தையும் பீதியையும் தோற்றுவித்துள்ளது.
அவசரகாலச்சட்டம் தற்போது அமுலில் இல்லை. கடந்த 31 ஆம் திகதி இரவுடன் அது நீக்கப்பட்டுள்ளது. அது நீக்கப்பட்டு 24 மணி நேரத்தினுள் இராணுவத்தினால் விபரம் கோரப்பட்டுள்ளது. இது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. அவ்விடயம் தொடர்பாக நான் அரசாங்க அதிபரின் கவனத்துக்கு கொண்டு வந்தேன். அரசாங்க அதிபர் இராணுவ கட்டளை அதிகாரியின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ள நிலையில் தற்போது இந் நடவடிக்கை முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக அறிகிறேன் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.