ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையின் தமிழ் மொழிபெயர்ப்பான போர்க்குற்றவாளி என்ற நூலை தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் நாடாளு மன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கிய தலைவர்கள் ஆகியோருக்கு மனிதம் என்ற மனித உரிமை அமைப்பு அன்பளிப்பாக வழங்கி வருகிறது.
இதனடிப்படையில், முதலில் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களுக்கு 25 போர்க்குற்றவாளி புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
அன்பளிப்பின் முதல் பிரதியை கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன் பெற்றுக் கொண்டு நன்றி தெரிவித்தார்.
ஐ.நா.வின் அறிக்கை முதன் முதலில் தமிழில் கொண்டுவரப்பட்டு இவ்வாறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அன்பளிப்பாகக் கொடுப்பதன் மூலம், மேலும் முழுதாக அறிக்கையைப் புரிந்து கொள்ள உதவும் என்றும் தேவைப்படும் காலத்தில் இதைச் செய்துள்ளதைப் பாராட்டி நன்றி தெரிவிக்கின்றேன் என்றார் தா.பாண்டியன்.
புத்தகத்தை மனிதம் அமைப்பின் சென்னைப் பொறுப்பாளர் சுரேஷ், தா.பாண்டியனிடம் கொடுத்தார்.
மனிதம் சென்னையின் இளைஞர் பிரிவு பொறுப்பாளரும் சட்டத்தரணியுமான கோபால் மற்றும் மனிதம் செயல் இயக்குநர் அக்னி சுப்பிரமணியமும் உடன் இருந்தனர்.
இதேவேளை, மார்க்சிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களுக்கும் 30 போர்க்குற்றவாளி புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
அன்பளிப்பின் முதல் பிரதியை மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார்.
மனிதம் அமைப்பு எவ்வித பிரதிபலனும் எதிர்ப்பார்க்காமல், ஐ.நா. அறிக்கையின் தமிழ் மொழிபெயர்ப்பை தங்களது கட்சியினருக்கு கொடுத்துள்ளதை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளப் போவதாகவும், இதற்கு பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறார் எனவும் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
வரும் வாரங்களில், தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சியின் நாடாளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களுக்கும் போர்க்குற்றவாளி புத்தகங்கள் கொடுக்கப்பட உள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.