மன்னாரிலிருந்து முச்சக்கர வண்டியொன்றில் கிளிநொச்சிக்கு சென்ற மூன்று இளைஞர்கள் கிறீஸ் மனிதர்கள் என்று பொதுமக்களால் நையப்புடைக்கப்பட்ட சம்பவம் கிளிநொச்சி நகரில் நடைபெற்றுள்ளது.
கிளிநொச்சி இராணுவ முகாமில் பணியாற்றும் இராணுவத்தினன் ஒருவர் விடுமுறையில் தென்பகுதியிலுள்ள தனது வீட்டிற்கு சென்றுவிட்டு மீண்டும் கடமைக்குச் செல்வதற்காக பஸ் மூலம் கடந்த சனிக்கிழமை இரவு 11 மணியளவில் மன்னார் நகருக்கு வந்துள்ளார்.
பின்னர் கிளிநொச்சி செல்வதற்காக பஸ் கிடைக்காததினால் மன்னார் நகரில் முச்சக்கரவண்டியொன்றை வாடகைக்கு அமர்த்தியுள்ளார்.
இரவு வேளையில் கிளிநொச்சிக்கு தனித்து செல்வது கடினமென உணர்ந்த முச்சக்கரவண்டி சாரதி தனது இரண்டு நண்பர்களையும் துணைக்கு அழைத்துக் கொண்டு குறித்த இராணுவத்தினனுடன் கிளிநொச்சி நோக்கி சென்றுள்ளார்.
இந்த நிலையில் ஞாயிறு அதிகாலை 3.30 மணியளவில் கிளிநொச்சி நகரில் குறித்த இராணுவத்தினனை இறக்கிவிட்ட முச்சக்கரவண்டி சாரதி தனது இரு நண்பர்களுடன் கிளிநொச்சி நகர்ப் பகுதியில் முச்சக்கரவண்டியை நிறுத்தி உள்ளே உறங்கியுள்ளனர்.
இந்நிலையில் அப்பகுதியில் கூடிய பெருமளவான பொதுமக்கள் அவர்களை கடுமையாகத் தாக்கி ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். பின்னர் விசாரணைகளை மேற்கொண்டு பொலிஸார் மூவரையும் விடுவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.