யாழ். நவாலி, அட்டகிரிப் பாடசாலைக்கு முன்பாக வீடொன்றுக்குள் நுழைந்த மர்ம மனிதன் உடைகளை உலரவிட்டுக் கொண்டிருந்த பெண்ணைத் தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று இரவு 8 மணிக்கு இடம்பெற்றுள்ளது. சம்பவம் நடைபெற்ற நேரம் இராணுவத்தினர் அந்தச் சுற்றாடலில் காணப்பட்டனர். எனினும் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:
குடும்பப் பெண் ஒருவர் உடைகளை உலரவிட்டுக் கொண்டிருந்த வேளை, ஒருவர் அவரைப் பின்புறமாகக் கட்டிப் பிடித்து கழுத்துப் பகுதியை திருகியதுடன் வாயையும் இறுக்கப் பொத்தியுள்ளார். பெண்மணி திணறிக் கத்திக் குழறியதும் அவர் தப்பியோடி விட்டார்.
துரத்திக்கொண்டு உடனே உறவினர்கள் வீதிக்கு வந்தபோது அங்கு இராணுவத்தினர் நிற்பதைக் கண்டு அவர்களிடம் சம்பவம் குறித்து விவரித்துள்ளனர். அதற்கு தாம் “எதுவும் செய்ய முடியாது. பொலிஸாருக்கு அறிவியுங்கள்” என்று கூறி விட்டு அவர்கள் சென்று விட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் சம்பவம் குறித்து மானிப்பாய் பொலிஸாரிடம் முறையிடப்பட்டது. இரவு 8.30 மணியளவில் அவர்கள் குறிப்பிட்ட இடத்துக்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டனர். “பின்னர் கிறீஸ் மனிதன் இல்லை இது வேறு பிரச்சினை” என்று உதாசீனமாக பதில் அளித்து விட்டு அங்கிருந்து சென்றனர் என்று கூறப்பட்டது.
இதேவேளை, பிரஸ்தாப பெண் தாலிக்கொடி மற்றும் நகைகள் அணிந்திருந்த போதும் அவை எதுவும் அபகரிக்கப்படவில்லை என்று அவரது வீட்டார் தெரிவித்தனர்.
இதேவேளை, ஊர்காவற்றுறை, பருத்தியடைப்புப் பகுதியில் நேற்றிரவு 9 மணிக்கு மற்றுமொரு சம்பவம் இடம் பெற்றுள்ளது. சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடிய இருவரைப்பின் தொடர்ந்து சென்ற இளைஞர்கள் இருவர் மீது அவர்கள் பதுங்கி இருந்து தாக்குதல் நடத்தினர் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் இதேயிடத்தைச் சேர்ந்த ஆர்.பீற்றர் (வயது 24), சி.ரமணன் (வயது26) ஆகி யோர் காயமடைந்துள்ளனர்.
சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கப்படுவதாவது:
குறித்த இடத்தில் வீடு ஒன்றுக்கு அருகில் சந்தேகமான முறையில் நடமாடிய இருவரை அவதானித்த இளைஞர்கள் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றுள்ளனர்.
இதன்போது பற்றைக்குள் பதுங்கியிருந்து கூரிய ஆயுதத்தால் ஒருவரைக் கீறியும் மற்றவரைத் தாக்கியும் விட்டு அவர்கள் தப்பி ஓடி விட்டனர்.
சம்பவம் ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து அங்கு வந்த பொலிஸார் மக்களை வீடுகளுக்குச் செல்லுமாறு பணித்து விட்டு திரும்பிச் சென்றனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸாரை தொடர்பு கொண்டு கேட்ட போது கடமையில் இருந்த பொலிஸார் ஒருவர், பொலிஸ் நிலையத்தில் எதுவித முறைப்பாடும் பதிவு செய்யப்படவில்லை என்றார்.
இதேவேளை, சித்தன்கேணி சிவன் கோயில் பகுதியில் நேற்றிரவு 7 மணியளவில் மூன்றாவது சம்பவம் நடந்துள்ளது. வீடொன்றுக்குள் நுழைய முற்பட்ட இருவர் அங்கிருந்தவர்கள் விழிப்படைந்ததை அடுத்து தப்பி ஓடினர் என்று தெரிவிக்கப்படுகிறது.
நேற்று நடைபெற்ற மூன்று சம்பவங்களின் போதும் குறிப்பிட்ட பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருந்ததாக மக்கள் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.