இந்தியாவில் இருந்து கடத்தி வந்து வேலணையிலுள்ள வீடொன்றினுள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 32 இலட்சம் ரூபா பெறுமதி மிக்க 288 கிலோகிராம் போதையூட்டப்பட்ட புகையிலைத் தூள் பைக்கற்றுக்கள் நேற்றுக் கைப்பற்றப்பட்டன. வீட்டு உரிமையாளரும் கைது செய்யப்பட்டார்.
யாழ். மதுவரித் திணைக்கள அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றை அடுத்து அங்குசென்ற திணைக்களப் பொறுப்பதிகாரி என்.கிருபாகரன் தலைமையில் கோபரல் எஸ். யாதவன், மதுவரி அலுவலர்களான என்.யோகலிங்கம், எஸ்.ஆர்.புவனேந்திரன், ரி. தேவமயூரன் ஆகியோரே இந்த அதிரடிப் பாய்ச்சலை மேற் கொண்டனர்.
புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய உடல் நலத்துக்குக் கேடான இந்த புகையிலைத் தூள் (போதைப்பொருள்) இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ளது என்று கிருபாகரன் தெரிவித்தார்.
இந்த போதைதரும் புகையிலைத் தூளை பதுக்கி வைத்திருந்த வேலணை கிழக்கைச் சேர்ந்த சேனாதிராசா பத்மநாதன் என்ற நபரை மதுவரித் திணைக்களத்தினர் கைது செய்து ஊர்காவற்றுறை நீதிமன்றில் நேற்று முன்னிலைப்படுத்தினர். கைப்பற்றப்பட்ட புகையிலை பைகளும் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டன.
ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிவான் திருமதி ஜோய் மகிழ் மகாதேவா இந்த வழக்கை விசாரணை செய்தார். சந்தேக நபர் தனது குற்றத்தை ஏற்றுக்கொண்டதனால் 5 இலட்சம் ரூபா அபராதம் செலுத்துமாறும் அபரா தம் செலுத்தத் தவறின் இரண்டு வருட சாதாரண சிறைத் தண்டனையும், பத்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட கடூழிய சிறைத் தண்டனையும் வழங்கித் தீர்ப்பளித்தார். கைப்பற்றப்பட்ட புகையிலைப் பைகளை அழிக்கும் படியும் நீதிவான் உத்தரவிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.