பக்கங்கள்

14 செப்டம்பர் 2011

நிரந்தர தீர்வு கிட்டும்வரை போராட்ட குணம் மாறப்போவதில்லை!

முள்ளிவாய்க்காலில் முடிவடைந்த ஆயுதப் போராட்டம் போல் தமது போராட்டங்கள் முடியப்போவதில்லை. தமக்கான நிரந்தர தீர்வு ஒன்று கிட்டும் வரை போராடும் குணமும் மாறப்போவதில்லையென தெற்காசிய வெளி விவகாரங்களுக்கான அமெரிக்க இராஜாங்க செயலரிடம் யாழ் மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையப்பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
யாழ்ப்பாணத்திற்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்த அமெரிக்க இராஜாங்கத் தூதுவர் குழு இணையங்களின் பிரதிநிதிகளை நேற்று செவ்வாய்க்கிழமை (13.0911) நண்பகல் 12 மணியளவில் கோவில் வீதியில் உள்ள அவர்களது அலுவலகத்தில் வைத்து சந்தித்தது. மேலும் அங்கு தெரிவிக்கப்படுகையில் தமிழ் மக்கள் தமது சொந்த மண்ணில் இருந்தும் கூட எதுவும் செய்யமுடியாது உள்ளதாகவும் பேச்சுச் சுதந்திரம் கூட மறுக்கப்பட்டுள்ளது எனவும் றொபேட் ஓ பிளேகின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
'எமது பகுதிகளில் எம்மை நாமே ஆளுகின்ற கட்டமைப்பு, மொழியுரிமை, கலாச்சாரம் போன்றவற்றைப் பாதுகாத்துக் கொள்வதற்கான உரிமைகள் எமக்குத் தேவை. கிறீஸ் பூதம் என்ற உருவாக்கம் மக்களை அச்ச நிலைமைக்குள் கொண்டுசென்று உளவியல் யுத்தத்தை நடாத்துகின்றது. எமது நிலங்கள் பறிக்கப்படுகின்றது. மீள் குடியேற்றம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. மீள் குடியேற்றப்பட்ட மக்களுக்கு வாழ்வாதார உதவிகள், வீட்டு வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. 55 சதவீதமான இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டு இருக்கவில்லை. தொழிற்சாலைகளை இயங்கவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வில்லை. பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வைக் காண அமெரிக்கா மற்றும் சர்வதேச சமூகம் முன்வர வேண்டும் என அவர்கள் கேட்டுக் கொண்டார்கள்.
குறிப்பாக ஜ.நா நிபுணர் குழு அறிக்கையினில் சுட்டிக்காட்டப்பட்டவாறு உண்மை நீதி மற்றும் இழப்பீடு தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டுமென்பதை சுட்டிக்காட்டியதாக யாழ்.; மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையப்பிரமுகர் சி.வி. கே. சிவஞானம் பின்னர் ஊடகவியலாளர்களிடையே உரையாடுகையில் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.