பக்கங்கள்

11 செப்டம்பர் 2011

தமிழ் மக்களை தொடர்ந்தும் கஷ்ரங்களுக்குள் சிக்க வைக்க அரசாங்கம் முயற்சிக்கின்றது!

அவசரகாலச் சட்டத்தின் மூலம் தமிழ் மக்கள் மீது பிரயோகிக்கப்பட்ட அழுத்தங்களையும் விட மிக மோசமான வகையில் அரசாங்கம் அம்மக்களிடம் நடந்துகொள்கிறது. அதற்காகவே கிறீஸ் பூதம் என்பதை உருவாக்கி தமிழ் மக்களை தொடர்ந்தும் கஷ்டங்களுக்குள் சிக்கவைக்க அரசாங்கம் முயற்சிக்கின்றது’ என மன்னார் மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை தெரிவித்தார்.
‘நாட்டுக்குள் இராணுவ ஆட்சியை கொண்டுவர விரும்பும் இந்த அரசாங்கம், அதற்காக பாதுகாப்பு தரப்பினரையே பயன்படுத்தி வடக்கு கிழக்கு மற்றும் மலையகப் பிரதேசங்களில் வாழும் அப்பாவித் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை அச்சத்துக்குள் தள்ளப் பார்க்கிறது’ என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ‘தமிழ், முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சியாகவே இந்த கிறீஸ் மனிதர் பிரச்சினை உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் அரசாங்கம் மௌனம் சாதிப்பது சந்தேகத்துக்கு வழிவகுக்கிறது,இந்தப் பிரச்சினை மிகவும் சின்ன விடயமாகும். இதற்கு தீர்வு காண அரசால் முடியும். அதற்கு அரசாங்கத்துக்கு வெகு நேரம் ஆகப்போவதில்லை. ஆனால் அரசாங்கம் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதில் தள்ளியே நிற்கிறது.
இதன்மூலம், தனக்கும் கிறீஸ் மனிதன் பிரச்சினைக்கும் தொடர்பு உள்ளது என்பதை அரசாங்கம் நிரூபித்து வருகின்றது. அவ்வாறு தொடர்பு இல்லை என்றால், பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடி இதற்கு தீர்வு காண அரசாங்கம் முயற்சித்திருக்கும். ஆனால் அப்படி செய்யவில்லை.
திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் இந்த சிறிய பிரச்சினையிலிருந்து பாரியதொரு நடவடிக்கையை நோக்கிப் பயணிக்க அரசாங்கம் முயற்சிக்கின்றது. அதற்காகவே பொதுமக்கள் மீது தாக்குதல்களை நடத்தி, கிறீஸ் மனிதர்கள் என மக்களால் பிடிக்கப்படும் பாதுகாப்பு தரப்பினரையும் காப்பாற்றி வருகின்றது.
இந்த பிரச்சினைக்கு எதிராக தமிழ் அரசியல் தலைமைகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களின் குரலுக்கு மதிப்பளித்து அவர்களை இந்தப் பிரச்சினையிலிருந்து மீட்க வேண்டும். இதனை நீடிக்க விடாது மக்களின் பாதுகாப்பையும் நிம்மதியான வாழ்க்கையையும் நிலைநாட்ட வேண்டும். அதற்கு உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.