யாழ்,இந்துக் கல்லூரியினால் நயினாதீவு அம்மனுக்கு நடத்தப்படும் நவராத்திரி பூசையில் கலந்துகொள்ளச் சென்ற மாணவன் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
இச்சம்பவம் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் புங்குடுதீவு குறிகாட்டுவான் இறங்குதுறைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இவ்விபத்துச் சம்பவத்தில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் தரம் 09 இல் கல்வி பயிலும் திருநெல்வேலி முடமாவடியைச் சேர்ந்த நல்லைநாதன் தனுஷன் (வயது 14) என்ற மாணவரே உயிரிழந்தவராவார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சமூகத்தினர் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் நவராத்திரி தின இரண்டாம் நாள் பூசை மேற்கொள்வது வழக்கம். இது கடந்த நான்கு வருடங்களாக மேற் கொள்ளப்பட்டு வருகின்றது. இதற்கென சுமார் 75 மாணவர்களும் 6 ஆசிரியர்கள் மற்றும் அதிபருமாக தனியார் பேருந்து ஒன்றை வாடகைக்கு அமர்த்தி அங்கு சென்றனர். பூசை நிகழ்வுகள் முடிந்த பின்பு பிற்பகல் 2 மணியளவில் நயினாதீவிலிருந்து குறிகாட்டுவானுக்குத் திரும்பினர்.
இந்நிலையில் அங்கிருந்து வாகனம் புறப்படத் தயரான போது சில மாணவர்கள் அதில் ஏறியுள்ளனர். அதன்போது பிரஸ்தாப மாணவர் கால் தடக்கிக் கீழே விழுந்ததால் வாகனச் சில்லு அவரின் தலையில் ஏறி மாணவன் ஸ்தலத்திலேயே பலியானதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இச்சம்பவம் தொடர்பாக நேரில் சென்று விசாரணைகளை மேற்கொண்ட ஊர்காவற்றுறை நீதிவான் திருமதி ஜோய் மகிழ் மகாதேவன் பிரேத பரிசோதனையின் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் கையளிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார். பொலிஸார் சாரதியைக் கைது செய்ததுடன் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இதேவேளை சம்பவம் தொடர்பில் கேள்வியுற்ற நல்லூர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் சி.மாணிக்கராசா சம்பவ இடத்திற்குச் சென்று நிலைமைகளை ஆராய்ந்ததுடன் மாணவனின் சடலத்தைப் பொறுப்பேற்று பெற்றோரிடம் கையளித்தார்.
இதேவேளை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்குச் சென்ற சிலர் கல்வீசித் தாக்கியதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அப்பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.