ஆயுத போராட்டம் நடத்தும் திட்டம் கிடையாது என ஜே.வி.பி. கிளர்ச்சி குழு உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர். இலங்கையில் மட்டுமன்றி உலக அளவிலும் ஆயுத போராட்டம் நடத்துவது புத்திசாதூரியமான தீர்மானமாக அமையாது என கிளர்ச்சிக் குழு ஊடகப் பேச்சாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் ஆயுத போராட்டங்களை நடத்துவதற்காக சந்தர்ப்பமும், சாத்தியமும் காணப்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறெனினும், 1991ம்; ஆண்டு சோவித் ஒன்றியம் வீழ்ச்சியடைந்ததனைத் தொடர்ந்து, அமெரிக்கா உலக அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டது என அவர் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் ஆயுத போராட்டங்கள் எதுவும் வெற்றியடைவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆயுத போராட்டமொன்றின் மூலம் எதனையும் சாதிக்க முடியும் என கருதவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக இது இலங்கைக்கு மிகவும் பொருத்தமானதாக அமையும் எனவும், மிக நீண்ட யுத்தத்தின் பின்னர் தற்போது மக்கள் நிம்மதியாக வாழ ஆரம்பித்துள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கட்சியை விட்டு விலகுவது தமது நோக்கமல்ல எனவும் தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும் என்பதே தமது பிரதான கோரிக்கை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய அரசியல் விவகாரங்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் சில முரண்பாடான நிலைமைகள் ஏற்பட்டதனை மறுக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக கட்சிக்குள் இவ்வாறான ஓர் முரண்பாட்டு நிலைமை நிலவி வருகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி வைத்தமை, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு தேர்தலில் ஆதரவளித்தமை போன்ற பல்வேறு விடயங்களில் கருத்து முரண்பாடு நிலவியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் கட்சி சரியான தீர்மானங்களை எடுக்கத் தவறியுள்ளதாகவும், குறிப்பாக யுத்தம் இடம்பெற்ற காலத்தில் ஜே.வி.பி.யின் தீர்மானங்கள் திருப்தி அடையும் வகையில் அமையவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒரு குறிப்பிட்ட இனத்தின் தேசியவாத கொள்கைகளை எமது கட்சி பிரதிபலிக்கவில்லை என அவர் வலியுறுத்தியுள்ளார். பிரிவினைவாதத்தை நாம் எதிர்க்கின்றோம், எனினும் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டத்தை முன்வைக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனநாயகத்துடன் கூடிய சமத்துவமான தீர்வுத் திட்டமொன்று வழங்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என அவர் குறிப்பிட்டுள்ளார். கட்சியில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தேசிய மாநாட்டைக் கூட்டி தீர்வு காண முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.