பக்கங்கள்

13 செப்டம்பர் 2011

எம்மை புறக்கணித்து விட்டு பெரும்பான்மை கட்சிகள் அரசியல் நடத்த முடியாது!

ஜனநாயக மக்கள் முன்னணி கொழும்பு மாவட்டத்து தமிழ் மக்களின் ஜனநாயக அரசியல் சக்தி. தமிழ் மக்களையும், எமது கட்சியையும் எந்தவொரு பெரும்பான்மை கட்சியும் உதிரிகளாக நடத்துவதற்கு நாங்கள் இடம் தரமாட்டோம். எங்களை புறக்கணித்துவிட்டு எந்தவொரு பெரும்பான்மை கட்சியும் கொழும்பிலே அரசியல் நடத்த முடியாத நிலைமையை நாம் உருவாக்குவோம் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோகணேசன் தெரிவித்துள்ளார். ஜனநாயக மக்கள் முன்னணியின் கொழும்பு மாநகரசபை வேட்பாளர்கள் எஸ்.குகவரதன், கே.ரீ.குருசாமி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்த பிரசாரக் கூட்டம் கொழும்பு ஆமர்வீதி, பிறைட்டன் மண்டபத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய மனோகணேசன் மேலும் கூறியதாவது,
அரசியலில் வெற்றி பெறுவதற்கு பொறுமை கட்டாயம் தேவை. நான் பத்து வருடங்களாக நாடாளுமன்றத்தில் இருந்தேன். இரு வருடங்களைத் தவிர, பெரும்பாலும் எதிர்கட்சியில் இருந்தேன். மூன்றுமுறை ஆளுகின்ற அரசுடன் இணைந்து கொள்வதற்கு எனக்கு அழைப்புவந்தது. 2004 இல் சந்திரிகா பண்டார நாயக்க அழைத்தார். 2005 இல் ஒருமுறையும், 2009 இல் ஒரு முறையும் பசில் ராஜபக்­ஷ‌ எனக்கு அழைப்பு விடுத்தார். அவர்கள் அழைப்பு விடுத்ததில் தவறேதும் கிடையாது. அழைப்புகளை நான் ஏற்றுக்கொள்ள வில்லை. ஆனால் அரசுடன் இணைந்து ஆகப் போவது எதுவுமில்லை என்பதால் நான் அவர்களது கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளவில்லை. அரசுடன் இணைந்து கொண்டவர்கள் எதையும் சாதிக்கவில்லை.
எனவேதான் பொறுமையுடன் இருக்கிறேன். பாராளுமன்றத்தில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் மனங்களில் வாழ்கிறேன். பொறுமையாக இருந்தால் உரிய இடம், உரிய நேரத்தில் தேடிவரும். புதிதாக பாராளுமன்றம் சென்ற சிலருக்கு பாராளுமன்ற உறுப்பினராக மாத்திரம் இருக்க முடியவில்லை. பாராளுமன்றம் என்பது என்ன என்பதை படிப்பதற்கு முன்னர் சிலருக்கு பிரதி அமைச்சராகி, அமைச்சராகி, ஜனாதிபதி ஆகவேண்டும் என்ற ஆசை வந்துவிடுகின்றது. இப்படியானவர்களின் அரசியல் வாழ்க்கை ஆரம்பமானவுடனையே சடுதியாக முடிவிற்கு வந்துவிடுகின்றது என்றார் அவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.