வவுனியாச் சிறைச்சாலையில் கைதிகளுக்கும் சிறைச்சாலைப் பாதுகாவலர்களுக்கும் இடையில் மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளமையால் கைதி ஒருவரும் சிறைக்காவலர் ஒருவரும் படுகாயம் அடைந்த நிலையில் வவுனியா பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா சிறைச்சாலைக்கு வழமையாக நீர்வழங்கும் பவுஸர் இன்று காலை சிறைச்சாலைக்குச் செல்லவில்லை. இதனை அடுத்து தமக்கு நீர் வேண்டும் எனக் கைதிகள் சிறைச்சாலை அதிகாரிகளைக் கேட்டிருக்கின்றனர். இதனை அடுத்து இரண்டு தரப்பிற்கும் இடையிலான வாய்த்தர்க்கம் மோதலாக மாறியிருக்கின்றது. இதன் பின்னரே கைதி ஒருவரும், சிறைக்காவலர் ஒருவரும் படுகாயம் அடைந்திருக்கின்றனர்.
இதேவேளை சிறைச்சாலையில் பதட்டமான சூழல் ஏற்பட்டிருப்பதாகவும் பொலிஸ் உயர்மட்ட உறுப்பினர்களும், சிறைச்சாலை அதிகாரிகளும் சிறைச்சாலைக்குச் சென்றிருப்பதாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். இதேவேளை தம்மை சிறையில் இருந்து மாற்றவேண்டும், அல்லது சிறை அதிகாரிகளை மாற்றவேண்டும் என்று கைதிகள் தெரிவிக்கின்றனர். தற்போதும் பதட்டமான சூழல் நிலவுகின்றது என்று எமது வவுனியா செய்தியாளர் மேலும் தெரிவிக்கின்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.