உடுவில் ஆலடிப் பகுதியில் வீதிக்கு வந்த பொதுமக்கள் இராணுவத்தினரால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிப் பிடி மற்றும் கொட்டன்களால் தாக்கப்பட்டதில் மோசமான காயங்களுக்கு உள்ளான மூவர் நீதிமன்ற உத்தரவின் பேரில் நேற்றுமாலை யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.
சந்தேகப்படும்படியாக நடமாடிய நபர்களைத் துரத்திச் சென்றபோதே இராணுவத்தினர் திடீரென வந்து தங்கள் மீது கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தினர் என்று அந்தப் பகுதி மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனிடம் தெரிவித்தனர்.
நேற்றுப் பகல் நாடாளுமன்ற உறுப்பினர் நேரில் சென்று அந்த மக்களைச் சந்தித்து நிலைமைகளைக் கேட்டறிந்தார். இராணுவத்தினர் கை, கால்களில் மட்டுமன்றி தமது பிறப்பு உறுப்புக்களை இலக்கு வைத்தும் தாக்கினர் என்று மக்கள் முறையிட்டனர்.
தாக்குதலின் பின்னர் தாம் பிடித்த மூவரை இராணுவத்தினர் மானிப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். பொலிஸார் அவர்களை மல்லாகம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர். ந.குபேரன் (வயது 38), ச.உதயகுமார் (வயது 42), ச.விஜயகுமார் (வயது 40) ஆகியோரே நீதிமன்றின் முன் கொண்டு வரப்பட்டனர்.
அவர்கள் மூவரையும் யாழ்.போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்று மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டார். எதிர்வரும் செவ்வாய்க் கிழமை மருத்துவ அறிக்கையுடன் அவர்களை மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப் படுத்துமாறும் உத்தரவிட்டார்.
வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்துள் அடங்கும் மயிலிட்டிப் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து உடுவில் ஆலடியில் வசித்த மக்கள் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனிடம் அந்த மக்கள் தெரிவித்ததாவது:
இராணுவத்தினர் எமது பகுதிக்கு வந்த சற்றுநேரத்திலேயே சந்தேகநபர்களின் நடமாட்டத்தை நாம் வீடுகளில் உணர்ந்தோம். நாம் முதலில் பார்த்த போது 5 இராணுவத்தினர் நின்றனர். சற்று நேரத்தில் அவர்களில் ஒருவரைக் காணக்கிடைக்கவில்லை.
பின்னர் யாரோ அடையாளம் தெரியாத நபர் நடமாடுவதாக எழுந்த கூச்சலை அடுத்து அந்த நபரைத் தேடி ஊர் ஆண்கள் அங்குமிங்குமாக அல்லோலகல்லோலப்பட்டு ஓடிக் கொண்டு இருக்கும்போது எதிரே அந்த 5 இராணுவத்தினரும் வந்தனர்.
அவர்கள் கைகளில் கொட்டன்களை வைத்திருந்தனர். எம்மீது கொட்டன்கள், துப்பாக்கிப் பிடிகளால் அடித்தனர். கர்ப்பிணிப் பெண் என்றுகூடப் பார்க்காமல் ஒருவரைத் தாக்கினர்.
இப்படி இராணுவத்தினர் மக்களைக் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குவதை நிறுத்த வேண்டும். அவர்களின் அடக்குமுறைக்குள் நாம் தொடர்ந்தும் வாழ முடியாது என்றனர் மக்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.