பக்கங்கள்

02 செப்டம்பர் 2011

யாழ்,பதட்டநிலைமை குறித்து பொது அமைப்புக்கள் கவலை!

கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாகக் குடாநாட்டில் சந்தேகத்துக் இடமானவர்களின் நடமாட்டம் மக்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை உண்டு பண்ணியுள்ளது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு இதுவரை உரிய தரப்புக்கள் எவையும் நடவடிக்கை எடுக்கவில்லை.
பதற்றத்தைக் கட்டுப்படுத்திச் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட வேண்டியவர்கள் கூட அதனைச் செய்யாமல் வன்முறையை ஊக்குவிக்கிறார்கள்.
இவ்வாறு யாழ். மாவட்டத்தில் உள்ள பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமயத் தலைவர்கள் குற்றஞ் சாட்டியுள்ளனர்.
குடாநாட்டில் தற்போது திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ள அசாதாரண நிலை குறித்துக் கவலை வெளியிட்டுள்ள அவர்கள் இவ்வாறான சம்பவங்கள் மேலும் தொடர்ந்தால் நிலைமை கட்டுக்கடங்காமல் எல்லை மீறக் கூடிய சாத்தியங்கள் உள்ளதாகவும் எச்சரித்துள்ளனர்.
உரிய தரப்பினர் இந்தப் பதற்ற நிலையை நீக்கி இயல்பு நிலையை ஏற்படுத்தாவிட்டால் அது அவர்களுக்கே பாதகமான நிலையை ஏற்படுத்தும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் மேலும் தெரிவித்தவை வருமாறு:
கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாகக் குடாநாட்டின் பல இடங்களிலும் சந்தேகத்துக்கு இடமானவர்களின் நடமாட்டங்கள் தொடர்ந்த வண்ணமுள்ளன. இவர்கள் இரவில் வீடுகளுக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்துவதும் மக்கள் திரண்டு அவர்களைக் கலைத்துச் சென்றால் ஓடித்தப்புவதும் சகஜமாகிவிட்டது.
மக்களால் விரட்டிச் செல்லப்படுபவர்கள் பிடிபடும் போது உடனடியாக அந்த இடத்துக்கு வரும் இராணுவத்தினர் இந்த நபர்களைப் பாதுகாப்பதுடன் விரட்டிப் பிடித்த மக்களை கண்டபடி தாக்கும் சம்பவங்களும் தொடர்கின்றன.
இந்தச் செயற்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றனவே தவிர குறைந்த பாடில்லை. இதனால் குடாநாட்டு மக்கள் இரவில் தூக்கமின்றி அச்சத்துடன் பொழுதைக் கழிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.
இதனால் குடாநாட்டில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் படையினர் பொதுமக்கள் இடையேயான உறவில் பெரும் விரிசல் நிலை ஏற்பட்டுள்ளது.
காரணம் பொலிஸார் மற்றும் படையினரின் ஆசீர்வாதத்துடனேயே இந்த சந்தேகத்துக் இடமானவர்களின் நடமாட்டம் இடம்பெறுவதாக மக்கள் கருதுகிறார்கள். படைத்தரப்பினர் இதனைக் கட்டுப்படுத்த முனையாதமையும் அவர்கள் மீதான சந்தேகம் வலுக்கக் காரணமாகின்றது.
எனவே இந்தச் சந்தேகத்துக் இடமானவர்களின் நடமாட்டம் உடன் கட்டுப்படுத்த வேண்டும் என்பதையே மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இந்த விடயத்தில் படையினரும் பொலிஸாரும் உடனடியாக இதய சுத்தியுடன் செயற்பட்டுக் குடாநாட்டு மக்கள் இயல்பு நிலையுடன் வாழ வழி வகுக்க வேண்டும்.
தவறினால் அவை பின்னர் வேண்டத்தகாத விளைவுகளை உண்டு பண்ணக் கூடும். மக்களின் மனங்களை வெல்லப் படையினரும் பொலிஸாரும் உடனடியாக இதனைக் கட்டுப்படுத்தும் செயற்பாட்டில் இறங்கவேண்டும்.
பொதுமக்களைத் தாக்கும் செயற்பாடுகளைக் கைவிட்டு அவர்களுடன் நல்லுறவைப் பேணி சேவையாற்ற வேண்டும் என்று தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.