பக்கங்கள்

24 செப்டம்பர் 2011

புங்குடுதீவில் இளம் பெண் மீது பாலியல் பலாத்கார முயற்சி!ஆட்டோ சாரதி கைது.

யாழ்ப்பாணத்தில் இருந்து புங்குடுதீவு இறுப்பிட்டியில் உள்ள தனது வீட்டுக்குச் சென்ற இளம் பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்டார் என்ற குற்றச் சாட்டில் ஒட்டோ சாரதி ஒருவர் ஊர்காவற்றுறை பொலிஸரால் கைது செய்யப் பட்டுள்ளார். சம்பவம் கடந்த 19 ஆம் திகதி திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் கூறினர். தனியார் பஸ் ஒன்றில் புங்குடு தீவுக்குச் சென்ற 23 வயதுள்ள இளம் பெண் இறுப்பிட்டிக்குச் செல்வதற்காக பெருங்காட்டுச் சந்தியில் இறங்கியுள்ளார். அங்கிருந்து தனது வீட்டுக்குச் செல்வதற்காக அங்கு நின்ற ஓட்டோவை வாடகைக்கு அமர்த்தி உள்ளார். இரவு நேரம் என்பதால் பஸ்ஸில் வந்திறங்கிய ஒரு முதியவர் அந்தப் பெண்ணுக்குத் துணையாகச் செல்ல யோசித்துத் தானும் அந்தப் பெண்பிள்ளையின் வீடுவரை வந்து திரும்பி வருவதாகவும் ஓட்டோ சாரதியிடம் தெரிவித்துள்ளார். ஓட்டோ சாரதி குறிப்பிட்ட பெண்பிள்ளை தனது உறவினர், தெரிந்தவர் என்று கூறி அந்தப் பெரியவரைத் தவிர்த்து விட்டு பெண்ணை மட்டும் ஏற்றிச் சென்றார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
ஓட்டோ எனது வீட்டுக்குச் செல்வதற்கான பாதையை விடுத்து ஊரதீவுக்குச் செல்லும் வீதியூடாகச் செல்வதைத் கண்டதும் நான் சத்தம் போட்டேன். எனினும் சன சந்தடி யற்ற அந்த இடத்தில் வைத்து ஒட்டோ சாரதி என்னைப் பலாத்காரம் செய்ய முயற்சித் தார் என்று தனது முறைப்பாட்டில் அந்தப் பெண் தெரிவித்துள்ளார். தன்னிடம் சாரதி முறை தவறி நடந்து கொள்வது குறித்து பொலிஸாரிடமும் இராணுவத்தினரிடமும் முறையிடுவேன் என்று யுவதி மிரட்டியதை அடுத்து பயந்து போன சாரதி, அவரை ஏற்றி வந்து வீட்டுக்கு அருகே இறக்கி விட்டுச் சென்றுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பாகப் பெண் தனது வீட்டாரிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து அவர்கள் குறிக் காட்டுவானில் உள்ள பொலிஸ் நிலையத்தில் முறையிடச் சென்றனர். ஆனால், குற்றப்பிரிவு முறைப்பாடுகளைத் தாம் எடுப்பதில்லை என்று கூறி அவர்களை ஊர்காவற்றுறைப் பொலிஸ் நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர்.
ஊர்காவற்றுறையில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. அங்குள்ள வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட பெண் பின்னர் யாழ்.போதனா வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டார். சம்பந்தப்பட்ட பெண்ணின் சட்டைகள் கிழிந்திருத்ததுடன் உடலில் சிறுசிறு நகக் கீறல் காயங்களும் காணப்பட்டதாகவும் மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஓட்டோ சாரதி இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். ஏற்கனவே இது போன்ற சம்பவங்களில் இவர் ஈடுபட்டிருந்தார் என்றும் எனினும் வழக்குகளைச் சந்திக்காமல் தப்பிக் கொண்டார் எனவும் பொலிஸார் கூறுகின்றனர்.யாழ்ப்பாணத்தில் இருந்து அன்றைய தினம் 7 மணிக்குப் புறப்பட வேண்டிய தனியார் பஸ் வவுனியாவில் இருந்து வரும் ஒருவருக்காகக் காத்திருந்து 45 நிமிடங்கள் பிந்தியே புறப்பட்டதாகவும் இரவு 8.45 இற்குப் பின்னரே அந்த பஸ் பெருங்காட்டுச் சந்தியை வந்து சேர்ந்ததாகவும் பஸ்களின் இந்த நேரம் தவறும் நடவடிக்கைகளே இந்தச் சம்பவம் இடம் பெறக்காரணம் எனவும் புங்குடுதீவு மக்கள் விசனப்படுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.