பக்கங்கள்

03 செப்டம்பர் 2011

கொழும்பு வாழ் தமிழ் மக்கள் தமது ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும்.

கொழும்பு வாழ் தமிழ் மக்கள் எதிர்வரும் கொழும்பு மாநகரசபைத் தேர்தலில் தங்களது ஒற்றுமையை வெளிப்படுத்தி மனோகணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியை அமோக வெற்றிபெறச் செய்ய வேண்டுமென்று அக் கட்சியின் கொழும்பு மாநகரசபை வேட்பாளர்களான கே.ரி.குருசாமி மற்றும் எஸ்.குகவரதன் இருவரும் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
முன்னாள் மாநகரசபை உறுப்பினரும் இம்முறை கொழும்பு மாநகரசபைத் தேர்தலில் ஏணிச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளருமான கே.ரி.குருசாமி இது பற்றி தெரிவிக்கையில்;
“1980 களிலில் இருந்து சமூக, சமயம் உட்பட பொதுச் சேவைகளில் ஈடுபட்டு வந்தேன். 2001 ஆம் ஆண்டு மனித நேயப் பண்பாளர் பெ.இராதாகிருஷ்ணன் மூலம் காலடி எடுத்து வைத்தேன். 2002, 2006 ஆம் ஆண்டுகளில் கொழும்பு மாநகரசபைத் தேர்தலில் வெற்றிபெற்று 8 ஆண்டுகள் மாநகரசபை உறுப்பினராகப் பதவி வகித்தேன்.
அமெரிக்காவில் ஒரு மாத கால தலைமைத்துவப் பயிற்சியை முடித்து சான்றிதழ் பெற்றேன். எனது மாநகரசபை உறுப்பினர் பதவிக் காலத்தில் கொழும்பு இந்துக் கல்லூரி, இராமநாதன் கல்லூரி, முஸ்லிம் மகளிர் கல்லூரிக்கு மத்தியில் வீதி சமிக்ஞை விளக்குகளை நிர்மாணிக்க முடிந்தமை பெரும் வெற்றியாகும். இதன் மூலம் இப்பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் நன்மை அடைந்தனர்.
அத்துடன் கொழும்பு செட்டியார்தெரு, காக்கைதீவு, கதிரானவத்தை போன்ற பாதைகள் கார்ப்பட் போட்டு செப்பனிடப்பட்டன. தேடிவரும் மக்களின் தேவை அறிந்து நான் சேவை செய்துள்ளேன். அது மட்டுமல்லாது தேசிய அரசியல் ரீதியாகவும் பல சேவைகளை புரிந்துள்ளேன்.
இவ்வாறானதொரு நிலைமையிலேயே ஜனநாயக மக்கள் முன்னணியில் இணைந்து போட்டியிடுகிறேன். மனோ கணேசன் தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுத்து உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் கௌரவமான நிலையில் இருக்கிறார். அவரது அர்ப்பணிப்பு இன்று தமிழ் மக்கள் மத்தியில் பேச வைத்துள்ளது.
வடக்கு, கிழக்கு மக்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் துணிவாற்றலுடன் கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வெற்றிபெறச் செய்தனர். பெரும்பான்மையின மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு நிற்கின்றனர். இந்த நிலையில் கொழும்பு வாழ் தமிழர்களான எம்மால் மட்டும் ஏன் ஒன்றுபட முடியாது. இத்தேர்தலில் ஒன்றுபட்டு தமிழர் தனித்துவத்தை வெளிப்படுத்துவோம்’ என்று தெரிவித்தார்.
குகவரதன்.
இதேநேரம், சக வேட்பாளரான எஸ்.குகவரதன் இது தொடர்பாக கருத்து வெளியிடுகையில்;
“கடந்த 10 வருடங்களுக்கு மேலாக அரசியலில் ஈடுபட்டு வருகிறேன். அதற்கு முன்பிருந்தே மலையகம் உட்பட பல பிரதேசங்களிலும் சமூக சேவைகளை மேற்கொண்டு வருகிறேன். குறிப்பாக மலையகத்தின் கல்வி அபிவிருத்திக்காக பெரும் உதவிகளை வழங்கியுள்ளேன். தொழிற் பயிற்சிகளும் வழங்கியுள்ளேன்.
அரிமா சங்கத்திலும் அங்கம் வகிப்பதோடு விதவைகள் சுயதொழில்களை ஆரம்பிப்பதற்கும் உதவிகளைச் செய்துள்ளேன். ஊனமுற்றோருக்கு சக்கர நாற்காலி வழங்கி வருகிறேன். கிருலப்பனை பிரதேசத்தில் 60 நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளின் கல்விக்காக மாதம் தலா 500 ரூபா வீதம் வழங்கப்படுகிறது.
மயூராபதி வீட்டுத்திட்டம் தீ விபத்தில் எரிந்த போது உடனடியாகத் தேவைப்படும் பொருட்களை அம் மக்களுக்கு வழங்கினேன். அது மட்டுமல்லாது 11 இலட்சம் ரூபா பெறுமதியான உதவிப் பொருட்களும் வழங்கப்பட்டன.
சிவில் பொறியியலாளரான நான் ஒரு தொழிலதிபராகவும் உள்ளேன். ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனின் துணிச்சல் என்னை மிகவும் கவர்ந்தது. தமிழ் மக்களுக்காக அவர் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறார். எனவே அந்த முன்னணியோடு நாம் இணைந்து போட்டியிடுகிறோம்’ என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.