பக்கங்கள்

04 ஜூன் 2012

நயினாதீவில் சிறிலங்கா கடற்படையினரின் கைக்குண்டு வெடித்து சிறுவன் பலி!

நயினாதீவில் சிறிலங்கா கடற்படையினரால் கைவிடப்பட்ட கைக்குண்டு ஒன்று வெடித்ததில் 15 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். தர்மலிங்கம் ரூபன் என்ற சிறுவனே உயிரிழந்தவராவார். இவர் நயினாதீவு நாகபூசனி அம்மன் கோவில் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த தனது தந்தையின் மீன்பிடிப்படகின் அருகே கிடந்த மர்மப்பொருள் ஒன்றை எடுத்து கையாண்ட போதே வெடித்துள்ளது. இன்று காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் நெஞ்சிலும் கால்களிலும் படுகாயமடைநத சிறுவன் சிறிலங்கா கடற்படையினரால் ஊர்காவற்றுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆபத்தான நிலையில் அங்கிருந்து யாழ். போதனா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட போதும், காலை 9.30 மணியளவில் சிறுவன் அங்கு உயிரிழந்தார். கடற்கரையில் கிடந்த கைக்குண்டு எடுத்து விளையாடிய போதே அது வெடித்திருக்கலாம் என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் கூறியுள்ளார். நயினாதீவு சிறிலங்கா கடற்படையினரின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்த பகுதியாகும். அங்கு ஒருபோதும் மோதல்கள் இடம்பெறவில்லை என்பதுடன், சிறிலங்கா கடற்படையினரைத் தவிர வேறெவரும் கைக்குண்டைக் கொண்டு செல்லவும் வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளை, நேற்று முன்தினம் சுண்டிக்குளம் கடலேரியில் மீன்டிபிடித்த சிறுவன் ஒருவன் மிதிவெடியில் சிக்கி படுகாயமடைந்துள்ளார். இந்தச் சம்பவத்தில் 14 வயதான கருப்பையா ரகுநாதன் என்ற சிறுவனே படுகாயமடைந்தவராவார். மிதிவெடிகள் அகற்றப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னரே இந்தப் பகுதியில் மீள்குடியமர்வு மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.