லண்டனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மகிந்த ராஜபக்ஷ, அங்கு ஈழத் தமிழர்களால் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மகிந்தவின் வரவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து லண்டன் வாழ் தமிழர்கள் பெரும் எடுப்பிலான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இந் நிலையில் மகிந்த ராஜபக்ச லண்டன் வந்தடைந்துள்ள பின்புலத்தில், இன்று அவர் தங்கியுள்ள ஹில்டன் தங்ககத்திற்கு முன்பாக பிரித்தானியாவாழ் தமிழ் மக்கள் ஒன்று திரண்டு பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரித்தானிய தமிழர் அமைப்புக்களின் ஒருங்கிணைந்த ஏற்பாட்டில் ஒன்று திரண்ட ஆயிரக்கணக்கான மக்களைக் கண்டு அஞ்சிய மகிந்த, பலத்த பாதுகாப்பின் மத்தியில் விடுதியில் இருந்து வெளியேறிச் சென்றுள்ளார்.
மகிந்த கலந்துகொள்ளும் நிகழ்வு, அவர் விடுதியில் இருந்து புறப்பட்ட நேரத்தில் இருந்து இரண்டு மணி நேரங்களின் பின்னரே இடம்பெற இருந்த போதிலும், பாதுகாப்பு அச்சம் காரணமாகவே அவர் முன்கூட்டியே புறப்பட்டுச் சென்றிருக்கின்றார்.
தமிழின அழிப்பை மேற்கொண்டு, போர்க்குற்றம் புரிந்த சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்சவை பிரித்தானிய மகாராணியின் வைர விழாவிற்கு அழைத்திருப்பது, தமிழ் மக்களின் மனங்களைப் புண்படுத்தும் செயற்பாடாகும்.
இதேவேளை, மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவு தெரிவித்து சிங்கள மக்கள் சிலர் எதிர்ப்புறத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், இரு தரப்பிற்கும் இடையில் அவ்வப்பொழுது வாய்த் தர்க்கம் இடம்பெற்றது. சிங்களவர்கள் சிலர் தமிழ் மக்களின் ஆர்ப்பாட்ட எல்லைக்குள் நுழைந்து தாக்கியுள்ளனர்.
போர்க்குற்றம் புரிந்து, தமிழின அழிப்பை மேற்கொண்ட மகிந்த ராஜபக்ச எதிர்வரும் 6ஆம் நாள் புதன்கிழமை் நிலக்கீழ் தொடரூந்து நிலையத்திற்கு அருகிலுள்ள மன்சன் அரங்கில் இடம்பெறும் நிகழ்வு ஒன்றில் பேச இருப்பதால், இதன்போது தமிழ் மக்கள் பெருமளவில் ஒன்று திரண்டு தமது எதிர்ப்பை வெளியிட இருக்கின்றனர்.
காலை 8:00 மணி முதல் பிற்பகல் 1:00 மணிவரை நடைபெறவுள்ள இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பிரித்தானிய தமிழ் மக்களுடன் ஐரோப்பிய நாடுகளில் இருந்துவரும் தமிழ் உறவுகளும் இணைந்துகொள்ள இருக்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.