வன்னி மாவட்டங்களில் தமிழ் மக்களின் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை ஏப்பம் விட்ட இலங்கை இராணுவம் தற்போது யாழ். மாவட்டத்திலும் முதற்கட்டமாக 61 ஏக்கர் நிலத்தை அபகரிப்பதற்கு முடிவு செய்துள்ளது. இதற்கான அதிகாரபூர்வ பூர்வாங்க ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.நல்லூர், கோப்பாய், தெல்லிப்பழை ஆகிய மூன்று பிரதேச செயலர் பிரிவுகளிலும் இருந்து மாத்திரம் இந்த 61 ஏக்கர் நிலம் அபகரிக்கப்பட உள்ளது. இவற்றில் தனியாரின் உறுதிக்காணிகளும் உள்ளடங்குகின்றன. இவற்றை காணி சுவீகரிப்பின் கீழ் மேற்கொள்வதற்கும் இராணுவம் திட்டங்களைத் தயார்ப்படுத்தி விட்டது. அது தவிர பிரதேச சபைகள், மற்றும் திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகளை அரச காணிகள் என்ற போர்வையில் கையகப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவில் கிட்டத்தட்ட 24 ஏக்கர் நிலமும் நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் சுமார் 2 ஏக்கர் நிலமும் தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரதேசத்தில் 35 ஏக்கர் நிலமும் இராணுவத்தால் கைப்பற்றப்பட உள்ளன.
தாம் கேட்கும் இந்தக் காணிகளைத் தம்மிடம் கையளிக்க ஏற்பாடுகளைச் செய்யுமாறு இராணுவம் இந்த மூன்று பிரதேச செயலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. ஆனால், தனியார் காணிகளை கையகப்படுத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ காணி அமைச்சின் செயலாளருக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று மாகாண காணி ஆணையாளர் பொ.தயானந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரச காணிகளாயின் அவை ஏற்கனவே யாருக்காவது வழங்கப்பட்டிருந்தனவா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் அவர் பிரதேச செயலர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த மூன்று பிரதேச செயலர் பிரிவுகளையும் தவிர்த்து பருத்தித்துறை, காரைநகர், வலி. மேற்கு ஆகிய பகுதிகளிலும் காணிகளைக் கைப்பற்ற இராணுவம் தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
யாழ். குடாநாட்டில் இருந்து இராணுவத்தினர் குறைக்கப்பட்டு வருகின்றனர் என்று நாடாளுமன்றத்தில் கூறப்பட்டு வருகின்றபோதும் இராணுவம் இங்கு மக்களின் காணிகளை கையகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவது ஏன் என்று மக்கள் ஆத்திரமடைந்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.