யாழ். போதனா வைத்தியசாலைக்கு நியமிக்கப்படும் சத்திரசிகிச்சை நிபுணர்களுக்கு அங்கு சத்திர சிகிச்சைக் கூட வசதிகள் போதுமானதாக இல்லை என்று கூறப்பட்டு வைத்தியசாலை நிர்வாகத்தால் அந்த நிபுணர்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர் என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
அந்த நிபுணர்களது சிகிச்சை இங்கு கிடைக்கப்பெறாமையால் நோயாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்த நிபுணத்துவ சிகிச்சையைப் பெறுவதற்காக நூற்றுக்கணக்கான நோயாளர்கள் கொழும்பு வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
வாய், முகம், தாடை சத்திர சிகிச்சை நிபுணர், நரம்பியல் சத்திரசிகிச்சை நிபுணர் ஆகியோர் அண்மையில் சுகாதார அமைச்சால் யாழ். போதனா வைத்தியசாலைக்கு நியமிக்கப்பட்டனர்.
இங்கு போதிய சத்திர சிகிச்சைக்கூட வசதிகள் இல்லை என்று வைத்தியசாலை நிர்வாகம் கூறியதை அடுத்து அவர்கள் வேறு வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.
சிறுநீரக சத்திர சிகிச்சை நிபுணர் மற்றும் நரம்பியல் சிகிச்சை நிபுணர்களை இங்கு நியமிப்பதில் இழுபறி நிலை இருந்து வருகிறது. மகப்பேற்று வைத்திய நிபுணர் ஒருவர் கடந்த வருடம் நியமிக்கப்பட்டார். அவரும் பின்னர் திருப்பி அனுப்பப்பட்டார்.
யாழ். போதனா வைத்தியசாலையில் தற்பொழுது ஐந்து சத்திரசிகிச்சைக்கூடங்கள் உள்ளன. மகப்பேற்று சத்திர சிகிச்சைக்கூடம் மற்றும் பிரதான 3 சத்திர சிகிச்சைக் கூடங்களும் உள்ளன.
பல தசாப்தங்களுக்கு முன்னர் தேவையான சத்திரசிகிச்சை நிபுணர்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கியிருந்தனர். தற்போது கட்டப்பட்டு வரும் கட்டடத்தொகுதியில் பல சத்திரசிகிச்சைக் கூடங்கள் அமையவுள்ளன. இந்த வருட இறுதியில் அந்த வேலைகள் பூர்த்தியடைந்து விடும் எனவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தேவையானளவு சத்திரசிகிச்சை நிபுணர்களை இப்பொழுதே உள்வாங்கி அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்யவேண்டும். அதைவிடுத்து காலம் கடத்துவதன் மூலமாக இங்குள்ள நோயாளர்களுக்கு சிறப்பான சேவையை வழங்கமுடியாத நிலையே தோன்றும்.
இது தொடர்பாக வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி பவானி பசுபதிராஜாவுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது:
இங்கு சத்திர சிகிச்சைக் கூட வசதிகள் போதுமானதாக இல்லை. அதனால் புதிதாக நிபுணர்களை உள்வாங்க முடியாதுள்ளது என்று பதிலளித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.